சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் “தயாரிப்பு எண் 2” படத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துமே கோலிவுட்டில் பரபரப்பான அலைகளை உருவாக்குகிறது. குறிப்பாக, ‘பிளாக் ஷீப்’ மூலம் மிக பிரபலமான பொழுதுபோக்கு கலைஞர்களினால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. நீண்ட காத்திருப்புக்கு விடையை அளித்துள்ளது படக்குழு. சமீபத்திய இசை சென்சேஷன் ஷபிர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
“ஷபிர் இசையமைத்த ஆல்பங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், குறுகிய காலத்திலேயே அவர் ஒரு சென்சேஷனாக மாறியிருக்கிறார். மிக குறுகிய காலத்தில் வெற்றி பாடல்களை வழங்கியிருக்கிறார் ஷபீர். மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலான தனித்துவமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வழங்கியது தான் ஷபீர் என்ற இசைக்கலைஞரை அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. எங்கள் படத்திற்கு ஷபீர் இசையமைப்பது மகிழ்ச்சி. எங்களது உழைப்பை ஷபீரின் இசை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என் நம்புகிறோம் ” என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால்.
இசையமைப்பாளர் ஷபிர் கூறும்போது, “துடிப்பான இளைஞர்கள் உள்ள ஒரு குழுவில் இணைந்தது மகிழ்ச்சி. யூடியூபில் அவர்களது நகைச்சுவை நிகழ்ழ்சிகள் மூலை முடுக்கெல்லாம் பிரபலம். ஒரு புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறிப்பாக, சிவகார்த்திகேயன் சார் பேனரில் பணிபுரியும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவே எனக்கு சிறந்த இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது” என்றார்.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 2’ படத்தில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் பல பிரபலமான யூடியூபர்கள் நடித்திருக்கிறார்கள்.