துப்பறிவு என்றொரு இசை ஆல்பம் எடுத்த தமிழ் ஆப்தனின் இரண்டாவது படைப்பே “செய்கை ஒரு பாடமாகட்டும்”

உலகில் இதுவரை யாரும் தொடாத கதையை வெளிப்படுத்தும் “செய்கை ஒரு பாடமாகட்டும்  “இசை ஆல்பம்
உலகில் உலகமயமாக்கல், முன்னேற்றம், மருத்துவ ஆராய்ச்சி என்கிற பெயர்களில் எத்தனையோ கொடுமைகள் மனிதனுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன.  மனிதனை ஒரு ஆராய்ச்சிப் பிராணியைப் போல நடத்தும் மிகக் கொடிய அமைப்பே Asylum என்பது. இதை 1959 – லேயே பல நாடுகள் தடை செய்து விட்டன. இருந்தும் சில நாடுகளில் தொடரவே செய்கின்றனர்.  மனநோய் மருத்துவமனையில் நுழைந்தால் நோய் சரியாகி மீண்டு வர முடியும். ஆனால் புகலிடம், சரணாலயம் என்கிற பெயரில் நடக்கும் ‘அசைலமி’ல் ஒரு முறை நுழைந்தால் வெளியே வர வே முடியாது.
ராணுவம் கேள்வி கேட்டால் கூட பதில் தர மாட்டார்கள். அங்கு நுழையும் மனிதர்களைப்  பிராணிகளைப் போல ஹைட்ரோதெரபி , மெக்கானிக்கல் ஸ்லாப் போன்று பல வித ஆராய்ச்சிக்குட்படுத்தி  கொடுமைப் படுத்துவார்கள். காஸ்மெடிக்ஸ் , பேர்னஸ்க்ரீம்கள் , பாடி ஸ்ப்ரே , அலங்காரப் பூச்சுகள் போன்றவை பற்றிய ஆராய்ச்சிக்கு அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். ரசாயனம் செலுத்தப்பட்டு அவர்கள் படும் பாடு சொல்ல முடியாது. சில நேரம் இறக்கவும் நேரிடும் . இந்தக் கொடுமையை உலகெங்கும் கொண்டு செல்லும் விதத்தில் உருவாவதுதான் “செய்கை ஒரு பாடமாகட்டும் ” ஹிப்ஹாப் இசை ஆல்பம். 
பாடல் வரிகள், இசை ,இயக்கம் , தயாரிப்பு வடிவமைப்பு என்று பங்களித்து  இதை உருவாக்கி வருபவர்  தமிழ் ஆப்தன் (தினேஷ் ) இவர் ஏற்கெனவே இந்தியா முழுக்க சுற்றி துப்பறிவு என்றொரு இசை ஆல்பம். எடுத்திருந்தார் . அது தூய்மை இந்தியா திட்ட முழக்கத்தை முன்னிறுத்தியதால் இந்திய அரசே தன் ஸ்வாச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா இயக்கத்துக்கான படைப்பாக ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது.  துப்பறிவின் பாடலைத்  தமிழிலும் இந்தியிலும் தூய்மை இந்தியா செயலியில் சேர்த்துப் பெருமை சேர்த்தது அரசு. 
அப்படிப்பட்ட சமூகப் பொறுப்புமிக்க கலைஞரான தமிழ் ஆப்தன் இயக்கும் இரண்டாவது படைப்பே “செய்கை ஒரு பாடமாகட்டும் “ஆல்பம். இளைஞர்களுக்கு பேச்சு , எழுத்து சுதந்திர உணர்வை அளிக்கும் விதத்தில் இது இருக்குமாம். 
ஆச்சி கிழவி திருக்கூடம் சார்பில் மா.திரவியபாண்டியன்  தயாரிக்கிறார். . சொழிந்தியம் மீடியா ஒர்க்ஸ்  இதற்குத் துணை நிற்கிறது. 
இந்த ஆல்பத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள’ ஈழம் பாய்ஸ் பாரிஸ் ‘குழுவிலுள்ள தமிழ்க்  கலைஞர்கள் தமிழின் பெருமை கூறும் பாடலைப் பாடியுள்ளனர். இதில் பல சுதந்திர இசைக் கலைஞர்கள் பாடியுள்ளதுடன் தோன்றியும் இருக்கிறார்கள்.
‘தாரை தப்பட்டை’ படத்தில் ‘வந்தனம் வந்தனம் ‘நாட்டுப்புறப் பாடல்  பாடிய கவிதா கோபியை மேற்கத்திய இசையில் பாட வைத்துள்ளனர் என்பது ஒரு சாம்பிள். 
இப் படைப்புக்கு ஒளிப்பதிவு அசோக் பன்னீர்செல்வம் ,படத் தொகுப்பு G.P.அருண் பிரபாகரன் , கலை இயக்கம்  சதீஷ்குமார் , நடனம் செல்வி. ஒப்பனை சசிகுமார், ஆடை வடிவமைப்பாளர் திவ்யா, சுதந்திர இசைக் கலைஞர்கள் திரைக் கலைஞர்கள் என்று இரு வகையினரும் இணைந்து இதை உருவாக்கி வருகிறார்கள்.