தலைமை செயலக ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் இன்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் தலைமை செயலகம் செல்லவில்லை. இதனிடையே, மெரினா கடற்கரையில் ஓபிஎஸ் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்ற பேட்டியை அளித்து தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதன் பிறகு அரசியலில் பல்வேறு விதமான மாற்றங்கள், பரபரப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று மதியம் 12 மணியளவில் ஓபிஎஸ் தலைமைச் செயலகம் சென்றார். அப்போது, தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு தலைமைச் செயலகம் வந்த முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்ததாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இதன் மூலம் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு அரசு ஊழியர்களிடமும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.