தமிழ்நாடு தடகள கூட்டமைப்பு சார்பில் சென்னையில் இரண்டுநாள் நடை போட்டி நடைபெற்றது.
அண்ணா சாலை மன்றோ சிலை அருகே நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஞாயிறு அன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இரண்டாவதுநாள் போட்டியை இந்திய தடகள கூட்டமைப்பு செயலாளர் வல்சன், தமிழ்நாடு தடகள கூட்டமைப்பு செயலாளர் லதா இருவரும் கொடியசைத்துத் துவக்கிவைத்தனர்.
50 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. 50 கிலோ மீட்டர் பிரிவில் ஆண்களும் 10 கிலோ மீட்டர் பிரிவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ஜெம் மருத்துவமனை மருத்துவர் செந்தில்நாதன், இந்திய தடகள கூட்டமைப்பு செயலாளர் வல்சன், தமிழ்நாடு தடகள கூட்டமைப்பு செயலாளர் லதா ஆகியோர் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
50 கிலோ மீட்டர் தூரத்தை ராஜன்ஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்தர் சிங் ரத்தோர் 4 மணிநேரம் 23 நிமிடம் 23 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த ஜோஷி சாகர் 4 மணிநேரம் 24 நிமிடம் 21 விநாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஹரியானாவை சேர்ந்த பவன் குமார் 4 மணிநேரம் 30 நிமிடம் 49 விநாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுராஜ் பன்வார் முதலிடம் பிடித்தார். ஜுனத் (ஹரியானா) இரண்டாவது பரிசையும், பார்மன் அலி (உத்திரபிரதேசம்) மூன்றாம் பரிசையும் பெற்றார். 10 கிலோ மீட்டர் பெண்கள் பிரிவில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ரோஜி பாடீல் முதலிடம் பிடித்தார். இரண்டாவது பரிசை மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுவர்னா கபசே பெற்றார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்பிரீத் கவுர் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.