பள்ளி குழந்தைகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைத்து செல்ல தடை

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குப் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பள்ளி சாரா விழாக்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல முறையான விதிகளை வகுக்க வேண்டும் எனக் கூறி பாடம் நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, பள்ளி சாரா விழாக்களுக்கு மாணவர்களை அழைத்து செல்வதால் அவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மாணவர்களைக் கட்டாயப்படுத்தி இந்த விழாக்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இது தொடர்பாக முறையான விதிகளும் வகுக்கப்படவில்லை. தற்போது நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்கள் கலந்து கொள்ள மாணவர்கள் அதிக அளவில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனை விசாரித்த நீதிபதிகள் வரும் 30ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குப் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல இடைக்கால தடை விதித்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும், அரசு சாரா விழாக்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது தொடர்பாக முறையான விதிகளை வகுப்பது குறித்தும் அரசின் விளக்கத்தை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.