சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், சசிகலா பரோலில் நிச்சயம் வருவார் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியது : “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனின் உடல்நிலை இப்போது மோசமாக உள்ளது.
அவருக்கு கல்லீரல் கிடைத்தால் உடனடியாக மாற்று சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். நடராஜனைப் பார்க்க வருவதற்காக சசிகலாவுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்திருக்கிறோம். பரோலில் வர நிச்சயமாக அனுமதி கிடைக்கும். எத்தனை நாள் அனுமதி அளிப்பது என்பதை சிறைத் துறை முடிவு செய்யும். அனுமதி கிடைத்தால் நாளையோ அல்லது அனுமதி கிடைத்தவுடனோ அவர் நிச்சயம் பரோலில் வருவார். 15 நாள்கள் பரோல் கேட்டிருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் எத்தனை நாள் கிடைக்கிறது என்பது தெரியவில்லை.
ஆனால் அவர் நிச்சயம் வருவார்” என தெரிவித்தார். மேலும், தமிழக புதிய ஆளுநர் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, “புதிதாக தமிழகத்துக்கு வருகின்ற ஆளுநராவது நடுநிலையோடு செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறோம். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் வரும் 4-ஆம் தேதி தீர்ப்பு வர உள்ளது. ஆளுநர் வந்த பிறகு கட்சி நிர்வாகிகள், சட்டப் பேரவை உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே அவரைச் சந்திப்போம்.” என கூறினார்.