சென்னை அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் சசிகலா இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதே சமயம், போயஸ்கார்டனில் தொண்டர்களே இல்லாமல் வெறிச்சோடியதால் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு 9 மணிக்கு திடீரென்று ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து கண்ணை மூடி தியானம் செய்தார். சுமார் 40 நிமிட தியானத்துக்குப் பிறகு, தன்னை மிரட்டித்தான் ராஜினாமா கடிதம் வாங்கினர் என்றும், அதிமுகவில் தனியாளாக இருந்து போராடத் தயாராக இருக்கிறேன் என்றும் பரபரப்பான பேட்டியளித்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சசிகலா உடனடியாக அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சுமார் 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பாதிக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா, இன்று காலை 10 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தார். இதனால் காலையிலேயே அதிமுக தலைமை அலுவலகத்திலும், போயஸ்கார்டனிலும் தொண்டர்கள் கூட்டம் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போயஸ் கார்டனில் காலையில் சுமார் 15, 20 பேர் மட்டுமே கூடியிருந்தனர். அதிமுக அலுவலகத்திலும் கூட்டமில்லை. இந்நிலையில், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மூத்த நிர்வாகிகள் தம்பித்துரை, செங்கோட்டையன், செம்மலை ஆகியோர் போயஸ் கார்டன் வந்திருந்தனர். அவர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணிநேரம் போயஸ்கார்டனில் இருந்த அவர்கள் ஒவ்வொருவராக சோகத்துடன் வெளியேறினர்.