ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஜீவா மற்றும் சூரி, பொய் சொல்லி வீடுகளை விற்பதில் வல்லவர்கள். என்ன தான் மற்றவர்களுக்கு சொந்த வீடு வாங்கிக் கொடுத்தாலும், ஜீவா தனது அம்மா ராதிகாவுடன் சொந்த வீடு இல்லை என்ற வருத்தத்துடனே வாழ்ந்து வருகிறார். தனது கணவர் இறந்த நிலையில் வாடகை வீட்டில் பட்ட கஷ்டம் காரணமாக, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஜீவாவை ஊக்கப்படுத்தும் தாயாக வருகிறார் ராதிகா.
தனது தாயின் ஆசையை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் ஜீவா, ஒரு பெரிய மாளிகை போன்ற வீட்டில் பேய் இருப்பதாக வதந்தியை பரப்ப வைக்கிறார். இதனால் அந்த வீட்டை வாங்க யாரும் முன்வராததால், குறைவான காசு கொடுத்து அந்த வீட்டை தானே வாங்கி, தனது அம்மா ராதிகா, மாமா இளவரசன், அவரது மகள், நண்பன் சூரி உள்ளிட்டோருடன் அங்கு குடிபெயர்கிறார்.
அதேநேரத்தில், அந்த வீட்டை உரிமை கொண்டாடி தம்பி ராமைய்யா, அவரது மனைவி தேவதர்ஷினி, மகள் ஸ்ரீதிவ்யா அதே வீட்டில் இருக்கின்றனர். முன்னதாக வீடு விற்க வந்த போது ஜீவாவை பார்த்த ஸ்ரீதிவ்யாவுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. தனது காதலை ஜீவாவுக்கு புரிய வைத்த பிறகு இருவரும் மகிழ்ச்சியுடன் காதலித்து வருகின்றனர். இருந்தாலும் ஜீவாவுக்கும் – தம்பி ராமைய்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட வீடு யாருக்கு சொந்தம் என்ற முடிவு தெரியும் வரை, இரு குடும்பமும் ஒரே வீட்டிலேயே தங்கும் நிலைக்கு வருகின்றனர்.
தம்பி ராமைய்யா குடும்பத்தை அந்த வீட்டை விட்டு விரட்ட பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்யும் ஜீவா மற்றும் சூரி, அந்த வீட்டில் பேய் இருப்பது போல சூழ்நிலைகளை உருவாக்கி, பயமுறுத்துகின்றனர். ஆனால் அந்த வீட்டில் உண்மையிலேயே ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பது பின்னர் தெரிய வருகிறது. இதையடுத்து, பேய் இருப்பதை உறுதி செய்ய ஜீவா, சூரி இணைந்து அரசு ஊழியரான கோவை சரளாவை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். இதில் பேய் இருப்பது உறுதி ஆவதுடன், அவர்கள் அந்த வீட்டை விட்டு காலி செய்யும் நிலைக்கு அந்த அமானுஷ்ய சக்தி அவர்களை உந்துகிறது.
அந்த பேயின் முந்தைய கதை என்ன? அந்த பேயை விரட்ட ஜீவா என்ன செய்தார்? ஜீவா – ஸ்ரீதிவ்யா காதல் வெற்றி அடைந்ததா? என்பது படத்தின் மீதிக்கதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்