‘சண்டக்கோழி-1’ எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல – விஷால்

விஷால் தயாரித்து நடித்துள்ள ‘சண்டக்கோழி-2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் சென்னையில் நடந்தது.

இந்தச் சந்திப்பில் நாயகன் விஷால், நாயகி கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீன், கவிஞர்கள் அறிவுமதி, பிருந்தா சாரதி, ஏகாதசி, அருண் பாரதி, நடிகர்கள் தென்னவன், மாரிமுத்து, ஜோ மல்லூரி, சண்முகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது, ” ‘சண்டக்கோழி-1’ எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல. அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்தக் கதையைப் பற்றி கேள்விப்பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட கால நண்பர் என்கிற உரிமையில் ‘அந்தப் படத்தில் நான் நடிக்கிறேன்’ என்று சொன்னேன். அப்போது ‘செல்லமே’ படம் கூட வெளிவரவில்லை.

‘சண்டக்கோழி’யில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார். அங்கே தொடங்கியதுதான் என் தமிழ்த் திரையுலக வாழ்க்கை. கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது.

பிற மாநிலங்களிலும் இந்தப் படத்தை ‘பந்தய கோழி’ என்று பெயர் வைத்து வெளியிட்டார்கள். அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட்.

லிங்குசாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம். என் அப்பா நினைத்திருந்தால் அந்தப் படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம். ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார். அங்கு முதல் இரண்டு வாரத்திற்கு கூட்டமே இல்லை. ஆனால், மூன்றாவது வாரத்திலிருந்து ரசிகர்கள் அலை மோத ஆரம்பித்தனர்.

அன்றைக்கு ஆரம்பித்து முதல் படம் முடித்து இதோ இப்போது 25-வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன். அதுவும் அதே ‘சண்டக்கோழி’யே எனக்கு 25-வது படமாகவும் அமைவதுதான் எனக்கு பெரிய சாதனையாக தோன்றுகிறது.

‘சண்டக்கோழி—2’, ‘பந்தயக்கோழி-2’  இரண்டுமே வரும் அக்டோபர்-18-ம் தேதியன்று வெளிவரவுள்ளது. அதுவும் ஆயுத பூஜை அன்று. பெரிய அளவில் வெளிவரவுள்ளது. 2000 பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று வெளிவரும்.

தயாரிப்பாளர் சங்கம் மூலமாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து படம் வெளிவந்து மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் எழுதினால்  சிறிய, பெரிய படங்களுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும்” என்றார்.

இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “நேற்று விஷால் இந்த படத்தை பார்த்துவிட்டு, ‘இதில் நடித்தவர்கள் எல்லாரும் இப்போதும் அப்படியேதான் உள்ளனர். பதின்மூன்று வருடம் ஆனது போல் தெரியலையே’ என்றார். எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.

முதல் பாகத்தில் அவருக்காக அதிகமாக மெனக்கெட்டேன். இரண்டாம் பாகத்திலும் விஷால் நன்றாக நடித்துள்ளார். நான் சூர்யா, மாதவன், அஜித் சாருடன் வேலை செய்துள்ளேன். அதன் பின் இவருடன் வேலை செய்யும்பொழுது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் வருவதை உணர்ந்தேன். இனி கதை மட்டுமே அவருக்கு சரியான முறையில் அமையும். எனக்கும் விஷாலுக்கும் இது அருமையான படமாக அமையும். அப்படியொரு குழு அமைந்து, அவ்வளவு உழைப்பை போட்டுள்ளோம்’’ என்றார் இயக்குநர் லிங்குசாமி.

படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் பேசும்போது, “மீரா ஜாஸ்மீன் மேடம் ‘சண்டக்கோழி’ முதல் பாகத்தில் எப்படி நடித்திருந்தார் என்று அனைவருக்குமே தெரியும். அதை நான் எப்படி பண்ண போகிறேன் என்ற பயம் எனக்குள் இருந்தது. அந்த கதாபாத்திரத்தைக் கேட்ட பின்பு அதற்கு நிகராகவாது நடிக்க வேண்டும் என தோன்றியது.

‘மகாநடி’ படபிடிப்பின்போது இந்த படம்தான் எனக்கு பெரிய ரிலாக்ஸாக இருந்தது. விஷால், லிங்குசாமி அவர்களுடன் படப்பிடிப்பு ரொம்ப மகிழ்ச்சியை தந்தது. ‘மகாநதி’க்கு பின் நான் மிகவும் விரும்பி நடித்த படம் இந்த ‘சண்டக்கோழி-2’-தான்’’ என்றார்