கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கோபிநாத் ரவி, கடந்த 2017 ஆம் ஆண்டில் மாடலிங் மீதான தனது ஆர்வத்தால் மாடலிங் உலகில் அடியெடுத்து வைத்தார். தற்போது தன்னுடைய கடின உழைப்பினால், பொது மக்களால் வாக்களிக்கப்பட்டு ரூபரு மிஸ்டர் இந்தியா ஆசிய பசிபிக் பட்டத்தை வென்றுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற 17 வது ரூபரு மிஸ்டர் இந்தியா ஆசிய பசிபிக் போட்டியில், உடற்தகுதி சுற்று, திறமை சுற்று, ஸ்டைலிங், அணுகுமுறை மற்றும் நடத்தை, வடிவமைப்பாளர் நடை சுற்று, நீச்சலுடை சுற்று மற்றும் இறுதியாக டக்செடோ சுற்று ஆகியவற்றை கடந்து வெற்றிவாகை சூடினார்.
பட்டம் வென்ற கோபிநாத் ரவி சென்னையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், முப்பத்தி நான்கு போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் திறமை சுற்று மிகவும் கடினமாக இருந்ததாகக் கூறினார். ஆனால், 2 நிமிடங்களுக்குள் ஆறுக்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்த கோபிநாத் ரவி, தன்னுடைய வாள் மற்றும் சிலம்பம் நடனத்தின் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் பெருமைகளை உணர்த்தி, இந்த கடுமையான போட்டியில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். மேலும், இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான மாஸ்டர்ஸ் ஆஃப் மிஸ்டர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள கோபிநாத் ரவி, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க கடுமையாக உழைத்து வெற்றி பெரும் நம்பிக்கையில் உள்ளார்.