அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.7000 கோடி நிதி நெருக்கடி

தமிழகம் முழுவதும் சுமார் 22 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 2 கோடி பேர் பயணம் செய்கின்றனர். 8 போக்குவரத்து கழகங்களாக செயல்படும் இவற்றில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். இதில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நிரந்தர தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்க முடியாத நிலைக்கு போக்குவரத்து துறை தள்ளப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு நிதி நெருக்கடியில் தத்தளிப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அரசு போக்குவரத்து கழகத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு 2 முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நஷ்டம் அதிகரித்து வருகிறது.

பஸ் டிக்கெட் கட்டணம் அதற்கேற்றவாறு உயர்த்தப்படாமல் இருப்பது தொடர் நஷ்டத்திற்கு வழி வகுக்கிறது. அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு மற்றும் நிர்வாக செலவுகளை பராமரிக்க முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து இழப்பீட்டு தொகை, டோல்கேட் கட்டணம் போன்றவற்றிற்கும் பெரும் தொகை தேவைப்படுகிறது. இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு முழுமையான தொகையை போக்குவரத்து கழகத்திற்கு அரசு வழங்குவது இல்லை.

போக்குவரத்து கழகத்திற்கு வருமானம் அதிகரிக்க வழியில்லாத நிலையில் சம்பளம், அகவிலைப்படி, ஓய்வூதியதாரர்களுக்கு சலுகை என செலவாகும் தொகை அதிகரித்து வருவதால் அவற்றை வழங்க முடியாமல் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. சுமார் ரூ. 7000 கோடி அளவிற்கு நிதி சுமை ஏற்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் போக்குவரத்து துறை நெருக்கடியில் உள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 15ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அண்ணா தொழிற்சங்கம் தவிர பிற சங்கங்கள் அனைத்தும் கூட்டாக அறிவித்துள்ளன. நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க பகுதி நிதியாக ரூ.2000 கோடி அரசு ஒதுக்கினால்தான் தொழிலாளர்களின் பிரச்சனையை ஓரளவிற்கு தீர்க்க முடியும் என்று தொழிற் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தன.

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் அரசு பஸ்களை முழு அளவில் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் வேலை நிறுத்தம் செய்தால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும். இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க தலைவர் ஆர்.சின்னசாமி கூறியதாவது,  போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய முக்கியமானது தான். அதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து பேசுவது முறையல்ல. ஓய்வூதியதாரர்களுக்கு 3 வருடமாக பணம் கொடுக்க முடியவில்லை. பலமுறை அரசிடம் பேசி இருக்கிறோம். போக்குவரத்து கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. முதல் கட்டமாக ரூ.1,500 கோடியாவது வழங்கினால்தான் தொழிலாளர் பிரச்சனையை ஓரளவிற்கு தீர்க்க முடியும்.

9ஆம் தேதிக்கு பிறகுதான் போக்குவரத்து துறை அமைச்சரிடம் இது பற்றி மீண்டும் பேச வேண்டும். வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வோம். அண்ணா தொழிற்சங்கத்தில் 92 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். 25 ஆயிரம் பேர் மற்ற சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.