Youtube தளத்தின் மூலம் மிகப்பெரிய கனவுகளோடு நுழைந்து, பெரிய திரைகளில் நடித்து ஒரு பிரபலமாக மாறிய ஒரு பெரிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த். தற்போது அவரின் ‘பிளாக் ஷீப்’ குடும்பத்துடன் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் மக்களை மகிழ்விக்க வருகிறார்.
இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி அவர் கூறும்போது, “ஆம், எங்களது குழுவில் உள்ள எல்லோரும் உணர்வது மற்றும் கூறுவது போல், படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தது. ஆனால், யாருக்கும் தெரியாத வகையில் உள்ளுக்குள் உணர்ச்சிகளும் கூட மறைந்திருந்தது. அது எங்கள் நீண்டகால கனவு ஒரே நேரத்தில் நனவாகி இருப்பதால் உருவான ஒரு எமோஷன். நாங்கள் நண்பர்கள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கை தான் எங்களை இந்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ வரை கொண்டு வந்திருக்கிறது. கார்த்திக் வேணுகோபாலனிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது பாசிட்டிவிட்டி. அது அவரை மட்டும் ஊக்கப்படுத்தாமல், அவரது நெருங்கிய நண்பர்களுக்கும் பரவும். எங்கள் தொழிலின் பின்னணியில் இந்த ஸ்கிரிப்ட்டை எழுதுவது பற்றிய அவரது பார்வை மற்றும் யோசனை என்னை மிகவும் ஈர்த்தது. இது வெறும் களம் மட்டுமே, படத்தில் நிறைய நகைச்சுவையும், நல்ல சிந்தனையை தூண்டும் செய்திகளும் உள்ளது” என்றார்.
ரியோராஜ் பற்றி கூறும்போது, “அவர் கண்டிப்பாக ஒரு கடின உழைப்பாளி என்பதை இந்த படப்பிடிப்பின் போது நான் பார்த்து தெரிந்து கொண்டேன். அவர் VJவாக இருந்த நாட்களில் இருந்தே அவரின் திறமையை நான் அறிவேன். ஷிரின் காஞ்ச்வாலா அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகை, எப்போதும் ஜாலியாக சிரித்து பேசி, கலாய்த்துக் கொண்டிருக்கும் எங்களை போன்ற ஆட்கள் மத்தியிலும், அவர் தனது வேலையில் மிக கவனமாக இருந்தார். குறிப்பாக தமிழ் மொழியை கற்றுக் கொள்வதில் மிகவும் உறுதியாக இருந்தார். ராதாரவி சார் மற்றும் நாஞ்சில் சம்பத் சார் போன்ற பிரபலங்களுடன் பணிபுரிவதை பற்றி நான் என்ன சொல்ல முடியும்? ராதாராவி சார் எல்லாவற்றையும் மிக சாதாரணமாக செய்துவிட்டார். அவரது கதாபாத்திரம் அனைவரது மனதிலும் நன்றாக பதியும். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நாஞ்சில் சம்பத் சாருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இப்போது, அவரது நட்சத்திர அந்தஸ்து அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் மற்றும் கலை அரசு ஆகிய இரு சகோதரர்களும் எங்கள் கனவுகளை நிறைவேற்றுவதில் முக்கிய தூண்களாக இருந்தனர். மேலும் நாங்கள் எடுத்த இந்த படம் அவர்களுக்கு முழு திருப்தியாக அமைந்தது மகிழ்ச்சி” என்றார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, கலை அரசு இணை தயாரிப்பு செய்துள்ள இந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஜூன் 14, 2019 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்திருக்கிறார். யுகே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.