திண்டுக்கல் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க கையொப்பமிட வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்ட வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தருமத்துபட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜெயக்கொடி,அப்பகுதியில் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் அரசு வேலை ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்காக, ஜெயக்கொடி மற்றும் அவரது சகோதரர் பிச்சை முத்து ஆகியோர், வாரிசு சான்றிதழ் கேட்டு திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலத்தில் மனு அளித்தனர்.
வாரிசு சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் கையெழுத்துப் பெற வேண்டும் என அறிவுறுத்தியதையடுத்து, இருவரும் தருமத்துபட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர். பின்னர் அப்பகுதி வருவாய் ஆய்வாளரான, தமிழ்செல்வனிடம் கையெழுத்துப் பெறச்சென்றபோது 25 ஆயிரம் ரூபாய் பணம் தந்தால்தான் கையெழுத்துப் போட முடியும் எனக் கூறியுள்ளார் தமிழ்ச்செல்வன்.
தங்களிடம் அவ்வளவு பணம் இல்லையென இருவரும் கூறியபோதும், 2 ஆயிரத்தைக் குறைத்துக் கொண்டு 23 ஆயிரம் கொடுத்தால்தான் கையெழுத்துப் போட முடியும் எனக் கராராகக் கூறியுள்ளார் தமிழ்ச்செல்வன். கையெழுத்துப் போடுவதற்காக 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கேட்ட தமிழ்செல்வன் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய்யும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.