ஒரு சில உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவுவதுடன், உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரிவெயில் வருகிற 4ஆம் தேதி தொடங்க இருப்பதையொட்டி, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தாலும் அனல்காற்று வீசுவது தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை தொடங்கிய உடன் வெப்பத்தின் தாக்கத்தை சற்று தணிக்கும் வகையில் கோடைமழை பெய்வது வழக்கம்.  அந்தவகையில் தற்போது வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் கோடைமழை எப்போது பெய்யும்? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்சம் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். சென்னையில் மழை பெய்யவாய்ப்பு இல்லை.

வட உள்மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் தென்பகுதி உள்மாவட்டங்களான மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களான காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும். தென் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.