விஷ்ணு விஷால் அமாலா பால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என்று அனைவரது பராட்டையும் பெற்று, கோலிவுட் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகமே திரும்பி பார்க்கும் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்திய மொழிகளில் மீண்டும் ரீமேக்காக உருவாகி வரும் இப்படம் தற்போது உலகளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது. லாஸ் ஏஞசலஸ் நகரில் நடைப்பெற்ற திரைப்பட போட்டி விருது விழாவில் (LATCHA) சிறந்த ஆக்ஷன் திரைப்பட விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றிருக்கிறது.
Axess Film Factory தயாரிப்பாளர் G. டில்லி பாபு “ராட்சசன்” படம் படைத்திருக்கும் இந்த சாதனை பற்றி தெரிவித்ததாவது….
“ராட்சசன்” படம் செய்திருக்கும் இந்தச் சாதனை மொத்தப் படக்குழுவையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாராட்டு படத்தில் பங்கேற்று உழைத்த அத்தனை நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையே சாரும். ராட்சசன் படத்தின் உருவாக்கத்தின் போதே, இப்படம் இத்தகைய சாதனைக்குரியது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஒரு தமிழ்ப்படம் உலகின் மதிப்புமிக்க லாஸ் ஏஞ்சலஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றிருப்பது மிகவும் பெருமைமிக்கது. இன்னும் இது போன்ற சிறந்த படைப்புகளை வழங்க இவ்விருது எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது. என்றார்.
விருது வென்றுள்ள இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது…
இந்த கௌரவம் எனது இயக்குநர் ராம்குமாருக்கும் தயாரிப்பாளர் டில்லிபாபுவுக்கும் மற்றும் என் மீது நிபந்தனையற்ற அனபும் நம்பிக்கையும் கொண்ட அத்தனை பேருக்கும் உரியது. இந்த வெற்றியானது கொண்டாட்டத்தை விட, அதீதமான பொறுப்புணர்வை தந்துள்ளது. இனி எனது இசைப்பயணத்தை மிகுந்த கவனமுடன் “ராட்சசன்” படத்தினை போன்ற வெற்றிப்பாதையில் அமைத்துக்கொள்ள இவ்விருது உத்வேகம் தந்திருக்கிறது. என்றார்.
இயக்குநர் ராம்குமார் தெரிவித்ததாவது….
உலகளவிலான அங்கீகாரம் ராட்சசன் படத்திற்கு கிடைத்திருப்பது மிகுந்த மாரியாதைக்குரியது. இது எனக்கு மட்டும் சொந்தமானதல்ல, படத்தில் உழைத்த அத்தனை பேரும் படத்தின் தரத்தை உயர்த்த பெரும் உழைப்பை தந்துள்ளார்கள் அவர்களுக்கு இந்த வெற்றியில் பெரும் பங்குண்டு. இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மேலும் பெருமை கொள்கிறேன் என்றார்.