‘ரான்சம்வேர்’ ஹேக்கிங் வைரஸ் திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள கம்ப்யூட்டர்களையும் ஹேக் செய்துள்ளது

டெக் உலகின் அசுரர்களாக தற்போது உருவெடுத்துள்ள ’வன்னாக்ரை’ ஹேக்கிங் குழுவினர் இ-மெயில் மூலமாக ஹேக்கிங் மால்வேரை ஒருவரது கம்ப்யூட்டருக்கு அனுப்புகின்றனர். கம்ப்யூட்டரை இயக்கும் நபர் விபரமின்றி அந்த இ-மெயிலை திறக்கும் போது அந்த மால்வேரானது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை ஹேக் செய்து விடுகிறது. குறிப்பிட்ட அளவு பணம் தரும் பட்சத்தில் திருடப்பட்ட தகவல்களை திரும்ப அளிப்போம், இல்லையெனில் அந்த தகவல்களை அழித்துவிடுவோம் எனவும் அக்குழுவினர் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த ‘ரான்சம்வேர்’ வைரஸின் தாக்குதலுக்கு உலகமுழுவதுமுள்ள மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் தப்பவில்லை.

அனைத்து நாடுகளிலும் உள்ள இணைய பாதுகாப்பு அமைப்புகள் இத்தாக்குதலில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்த வழிமுறைகளை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவில் மேற்கு வங்க மாநில மின்சார துறை அலுவலகம், கேரள மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து துறை அலுவலகங்களில் இருக்கும் கம்ப்யூட்டர்கள் இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்தன. திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சுமார் 10-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில கம்ப்யூட்டர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் முக்கிய தகவல்கள் எதும் இல்லை, டிக்கெட் விற்பனை மற்றும் வேறு சில தகவல்கள் தொடர்பான கம்ப்யூட்டர்கள் தான் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தேவஸ்தான செயல் அதிகார் அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.