‘ராட்சசி’யைப் பாராட்டி அப்படக்குழுவினரைப் பாராட்ட நேரில் அழைத்த மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக்

அரசு பள்ளிகளின் நிலையையும், அரசு ஆசிரியர்களின் நிலையையும் நடைமுறை மாறாமல் கூறிய படம் ‘ராட்சசி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இப்படத்தைப் பார்த்தாவது நமது அரசு பள்ளிகளில் மாற்றங்களைக் கொண்டு வருமா நமது அரசு? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக், ஒரு கல்வி அமைச்சராக இப்படத்தைப் பார்க்கும்போது எங்கள் நாட்டு சூழலோடு பொருத்திப் பார்க்கிறேன், நாம் செய்ய வேண்டிய பலவகையான திட்டங்களும், மாற்றங்களும் பற்றி இந்த படத்தில் கூறியிருக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வியை வளர்ப்பதே அனைத்துக் கட்சியினருடைய இலக்காக இருக்க வேண்டும். அதைதான் நாங்கள் செய்துக் கொண்டிருக்கின்றோம் என்றார். மேலும், இப்படக்குழுவினருக்கும், நாயகியாக நடித்த ஜோதிகாவிற்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு ஜோதிகாவும், இந்திய படத்தைப் பார்த்து அதில் கூறியதுபோல், தங்கள் நாட்டில் மாற்றம் கொண்டுவர விரும்பும் தங்களுக்கு நன்றி என்று பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் குழுவினரை நேரில் பாராட்ட மலேசியா அழைத்துள்ளார் அந்நாட்டின் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக். கல்வித்துறை துணை அமைச்சர் ஒய்.பி. டியோ னி சிங், டி.ஜி.வி. தலைமை நிர்வாக அதிகாரி யோ ஓன் லாய் மற்றும் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் ஆகியோர் ‘ராட்சசி’ படக்குழுவினருடன் மலேசியாவில் உள்ள டி.ஜி.வி. சேத்தியாவாக் என்ற மாலில் உள்ள ஆர்.ஜி.வி. திரையரங்கில் படம் பார்க்கவுள்ளனர். இதன்பிறகு கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் படக்குழுவினருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் எஸ்.ஒய்.கௌதம் ராஜ், இணை தயாரிப்பாளர் அரவிந்த் பாஸ்கரன் மற்றும் வசனகர்த்தா பாரதி தம்பி பங்குகொண்டுள்ளுனர்.