தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் தனுஷ் ரொம்பவே வித்தியாசமானவர். தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர். இன்னொரு பக்கம் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு.. ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 50வது படமாக ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். ஜூலை-28 தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடும் விதமாக வரும் ஜூலை-26ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது.
இன்னொரு பக்கம் பிரபல கதாநாயகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள் நடித்த ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றன, அந்த வகையில் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக அதே ஜூலை-26ஆம் தேதி தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் ரீ ரிலீஸ் ஆகிறது. ஏடிஎம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளரும் பிரபல விநியோகஸ்தருமான மதுராஜ் இந்தப்படத்தை தமிழகமமெங்கும் வெளியிடுகிறார். சமீபத்தில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘பில்லா-2’ படத்தையும் இவர் தான் ரீ ரிலீஸ் செய்திருந்தார்.
2006ல் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘புதுப்பேட்டை’, ஒரு கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்களை கவர்ந்தது. இந்தப்படத்தில் முதன்முறையாக கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தனுஷ். சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். நடிகர் விஜய்சேதுபதி இந்தப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டமாக இந்த வருடம் அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து கிடைக்க போகிறது என்பது மட்டும் உறுதி.