ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவை நோக்கி திரளும் இளைஞர்கள் பட்டாளம்

ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். நேற்றிரவு வரை நீடித்த இந்தப் போராட்டம் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய நடைபெற்று, இன்று காலைவரை தொடர்ந்து வருகிறது. முன்னதாக, நேற்றிரவு மெரினா கடற்கரை சாலையில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் திடீரென அணைந்ததால் இந்தப் போராட்டம் புதிய வடிவத்தை பெற்றுள்ளது. கைபேசிகளில் உள்ள டார்ச் லைட்களை தீபம் போல் மிளிரவிட்டு போராட்டக்காரர்கள் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனர். அவர்களை சமாதானப்பட்டுத்த மாநில அமைச்சர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற உறுதிமொழியை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அளிக்கும்வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை விரிவான அறிக்கை வெளியிடுவார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று காலையில் இருந்து சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றவண்ணம் உள்ளனர். இதுதவிர, சென்னை நகரின் பல பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் லாரி மற்றும் வேன்களில் ஏறி மெரினா கடற்கரையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நகரின் பல முக்கிய சாலைகளில் கருப்பு சட்டை அணிந்தபடி செல்லும் மக்களை சுமந்தபடி மெரினாவை நோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடிந்தது. காலை 10.30 மணி நிலவரப்படி மெரினா கடற்கரை சாலை முழுக்க மக்கள் தலைகளாகவே காணப்படுகின்றன. நடிகர் மன்சூர் அலிகான், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சில திரை பிரபலங்களும் இங்கு குவிந்துள்ளதால் இன்றைய போராட்டத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மெரினா உள்பட மாநிலத்தின் பிறபகுதிகளில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்தும், சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாகவும் தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.