சின்னத்திரையில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய திருமதி சுஜாதா விஜயகுமார் தற்போது அடங்க மறு படம் மூலம் பெரிய திரையில் காலடி எடுத்து வைக்கிறார். ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்க மறு’ படத்தின் காட்சி விளம்பரங்கள் மற்றும் பாடல்கள் படத்தின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவில் ஏற்றி வைத்திருக்கிறது. நல்ல திறமையான படக்குழுவுடன் பணிபுரிந்த தன் அனுபவத்தை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார்.
“பல தொலைக்காட்சித் தொடர்களில் ஒரு பகுதியாக இருந்ததால், மிகவும் ஒரு விதிவிலக்காகவும், அதே நேரத்தில் சிறப்பான ஒரு படத்தை கொடுக்க நான் விரும்பினேன். தற்போது அடங்க மறு படத்தின் அவுட்புட் பார்க்கும்போது என் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவும் என் கனவை நனவாக்கி இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு பார்வையாளராக இந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாராட்டுக்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் தான் போய் சேரும். படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.
படக்குழுவினரை பாராட்டி பேசும்போது, “நிச்சாயமாக, ஜெயம் ரவி தயாரிப்பாளர்களுக்கு ஒரு “பாதுகாப்பான பந்தயம்”. அவரது திறமையான நடிப்பு மற்றும் கதைதேர்வுகளை வைத்து மட்டும் சொல்லவில்லை, அவர் தன் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் முக்கியமான காரணம். ஒரு தயாரிப்பாளர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் எப்போதும் தயாரிப்பாளர்களை முதல் இடத்திலும், இயக்குனர்களை அடுத்த இடத்திலும் வைத்து மதிக்கிறார். அடங்க மறு அவரது கேரியரில் மிகவும் தனித்துவமான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். ராஷி கண்ணாவுடன் பணிபுரிந்த பிறகு, அவர் வெறும் அழகு பொம்மையாக மட்டுமல்லாமல், சவாலான கதாபாத்திரங்களிலும் நடிக்கும் அளவுக்கு திறமையானவர் என்பது புரிந்தது. இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஒரு கேப்டனாக மட்டுமல்ல, அதன் வடிவமைப்பாளராகவும் உள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார். கதாநாயகன், வில்லன் மட்டுமல்ல ஒரு சின்ன கதாபாத்திரம் கூட படம் முடிந்து போகும்போது நம் மனதில் நிற்கும்” என்றார்.
சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் அடங்க மறு படத்தை தயாரித்திருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. சாம் சி.எஸ் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், ரூபம் எடிட்டிங்கில் மிகச்சிறப்பாக உருவாகியிருக்கிறது அடங்க மறு.