டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான கோமாளி விமர்சகர்களின் சிறப்பான பாராட்டுதல்களைப் பெற்றதுடன், ரசிகர்களிடையும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதால் வசூல் ரீதியில் பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்திருக்கிறது.
இந்த வெற்றிக்குக் காரணமான கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஓர் ஆடம்பர ஹோண்டா சிட்டி காரை பரிசாக அளித்திருக்கிறார். இதைப்போலவே முன்னர் எல்.கே.ஜி. படத்தை வெற்றிப்படமாக்கிய இயக்குநர் பிரபுவுக்கும் கார் ஒன்றை ஐசரி கணேஷ் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இது குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும்போது, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கோமாளி படம் துவங்கியதிலிருந்தே தயாரிப்பாளர் என்பதைத் தாண்டியும், ஐசரி கணேஷ் சார் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததுடன், படம் சிறப்பாக உருவாகத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து உதவினார்.
கோமாளி படத்தில் 90களின் குழந்தைகள் பற்றிய பகுதியில் நான் ஒரு விஷயத்தைத் தவற விட்டிருந்தேன். அதாவது அப்போதைய குழந்தைகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் பரிசு தருவேன் என்று சொல்லி பெற்றோர் ஊக்கம் கொடுப்பார்கள். இதை நான் படத்தில் காட்சிப்படுத்தத் தவறிவிட்டேன். ஆனால் என் தந்தையைபோல் நான் மதிக்கும் ஐசரி கணேஷ் சார், கோமாளி படத்தின் வெற்றிக்காக எனக்கு இப்போது ஹோண்டா சிட்டி கார் பரிசளித்திருக்கிறார். ஜெயம் ரவி அண்ணன், காஜல் அகர்வால், சம்யுக்தா, கே.எஸ்.ரவிகுமார் சார், ஹிப் ஹாப் ஆதி மற்றும் படத்தில் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.