புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. புரோ கபடி லீக் போட்டி 2014ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அறிமுக போட்டியில் ஜெய்ப்பூர் பிங்ஸ் பாந்தர்ஸ் அணியும், 2வது போட்டியில் மும்பை அணியும் (2015), 3வது மற்றும் 4வது போட்டியில் (2016) பாட்னா பைரட்ஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு அமர்க்களமாக ஆரம்பமாகிறது.
அக்டோபர் 28ஆம் தேதி வரை 3 மாதம் இந்த கபடி திருவிழா அரங்கேறுகிறது. முதல் 4 சீசனில் 8 அணிகள் கலந்து கொண்டன. ஆனால் இந்த ஆண்டில் கூடுதலாக 4 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி தமிழ்நாடு, உத்தரபிரதேசம், அரியானா, குஜராத் மாநிலங்களை சேர்ந்த அணிகள் புரோ கபடியில் முதல்முறையாக அடியெடுத்து வைத்துள்ளன. போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. ‘ஏ’ பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பை மற்றும் தபாங் டெல்லி, புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், ‘பி’ பிரிவில் இரண்டு முறை சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், உத்தரபிரதேச யோத்தா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும். அத்துடன் அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் 21 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். அக்டோபர் 20ஆம் தேதியுடன் லீக் சுற்று முடிவுக்கு வருகிறது. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். ‘பிளே-ஆப்’ சுற்றில் 3 தகுதி சுற்று (குவாலிபையர்), 2 வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டங்கள் உண்டு. இதன் முடிவில் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 3 தகுதி சுற்று மற்றும் முதல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்கள் மும்பையிலும், கடைசி வெளியேற்றுதல் சுற்று மற்றும் இறுதிப்போட்டி சென்னையிலும் நடக்கிறது.
புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க விழா ஐதராபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. விழாவில் நடிகர் அக்ஷய்குமார், கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ், பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், நடிகர் சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். தொடக்க விழாவையொட்டி நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தொடக்க விழாவை தொடர்ந்து 2 லீக் ஆட்டங்கள் முதல் நாளில் நடைபெறுகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி) அணியும், 2-வது ஆட்டத்தில் யு மும்பை-புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணியும் சந்திக்கின்றன.
தமிழர்களின் வீர விளையாட்டான கபடியில் கடந்த 4 சீசன்களில் தமிழக அணி இடம் பெறாததால் ஏங்கி தவித்த ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் சென்னை நகரை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி முதல்முறையாக களம் காண இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கபடி ஆட்டத்தை உலகுக்கு வழங்கிய தமிழகத்தில் இருந்து உருவாகியுள்ள தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் போட்டியை தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக அஜய் தாகூர் இருக்கிறார். பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கே.பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் தலைவாஸ் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. முதல் உள்ளூர் ஆட்டம் செப்டம்பர் 29ஆம் தேதி நடக்கிறது.