தமிழில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் 20% முன்னுரிமை அளிக்கும் அரசாணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு இது குறித்த அரசாணை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.
ஆனால், அந்த அரசாணையை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை என திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 2010இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அதன்படி, தமிழில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் கட்டாயம் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும், மனுதாரர் செந்தில்குமாரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.