“எங்களை சமூகவிரோதி, பொறுக்கிகள் என்று சொன்னாலும் கவலையில்லை”; சுரேஷ் காமாட்சி

பொறுக்கிஸ் இசைவெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இன்றைய சூழலில் கார்ப்பரேட் ஆதிக்கத்தினால், விளைநிலங்களில் வீடுகளை கட்டிவிட்டு உணவுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் காலத்தில், அப்படி ஒரு டிஜிட்டல் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இந்த காலத்தில் விவசாயத்தின் பெருமைகளை மிகத் தைரியமாகக் கூற ஒரு இயக்குநர் வந்திருக்கிறார் என்கிறபோது மிகவும் பெருமையாக இருக்கிறது. 

சினிமாக்காரர்களிடம் சமூகப் பொறுப்பு இல்லை என்று சமீபகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமாக்காரர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை  நிருபிக்க வந்த இயக்குநருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 
இப்படிப்பட்ட கருத்துகளை சொல்வதினால் எங்களை சமூகவிரோதிகள் , பொறுக்கிகள் என்று சொன்னாலும் சரி அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இப்படிப்பட்ட கருத்துக்களை சொல்ல தைரியம் வேண்டும். இதற்கு ராதாரவியை தேர்ந்தெடுத்தது மிகவும் சரியான ஒன்று. 
படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே நிறைய அரசியல் இருப்பது தெரிகிறது. ராதாவி சார் சும்மாவே ஆடுவார்.. அவருக்கு சலங்கையும் கட்டி  ஆடவிட்டால் கேட்கணுமா..? நாம வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு போராளிகள் எனச் சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. இந்த மாதிரி கருத்துக்களை தைரியமாக தெரிவிக்க நிறைய சினிமாக்காரர்கள் முன்வரவேண்டும்.
இன்று தமிழ் சினிமாவில் பத்து சதவீதம் தான் பெரிய படங்கள் வருகின்றன. மீதி 90 சதவீதம் சிறிய படங்கள் தான்.. ஆனால் இந்த சின்ன படங்களை வைத்துதான் இன்று சினிமாத் துறையே இயங்கிக்கொண்டு இருக்கிறது. இவங்க, எல்லோரையும் வாழவைக்கும் ஏணியா இருந்துட்டு, இவங்க மட்டும் இன்னமும் அதே இடத்துல இருந்துட்டு இருக்காங்க..இவங்களை ஏற்றிவிட ஊடகங்களின் ஆதரவு வேண்டும்” என வேண்டுகோளுடன் முடித்தார்.