சுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில்’பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர்

KNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் ‘பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே  ’அல்ல நாங்கள்’ என்ற  சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது.
பிசாசு, சவரக்கத்தி  படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S  ‘பொறுக்கிஸ்’  படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம்  இயக்குநராக மாறியுள்ளார். 
படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக  ராதாரவி நடித்துள்ளார்.  ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி  நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார்.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..
இயக்குநர் மஞ்சுநாத் பேசும்போது, ” நமது தமிழகத்தின் ஆதிக் கலையான கூத்துக் கலையையும், அந்த கூத்துக் கலையை நமக்கு தற்போதும் கொண்டுவந்து சேர்ப்பவர்களின் இப்போதைய வாழ்வியல் நிலையையும் அவர்களது இன்ப துன்பம் பற்றிய அலசலாகத் தான் இந்த படம் உருவாகியுள்ளது. 
அது மட்டுமல்ல  படத்தில் விவசாயப் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறோம்.  நாமும் மாறவேண்டும் என்கிற தீர்வையும் சொல்லியிருக்கிறோம். அதேசமயம் எதையுமே அறிவுரையாக சொல்லவில்லை. 
தவிர, இன்றைய சமுதாயத்தையே அழித்துக்கொண்டிருக்கும் மதுவை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பற்றி இந்த படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம். இந்த படத்திற்கு முதலில் பொறுக்கிஸ் என்று தான் பெயர் வைத்தோம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுப்ரமணியசாமி தமிழர்களை பொறுக்கிஸ் என அழைத்தார்.. அந்த கோபத்தில் தான் இந்த டைட்டிலை வைத்தோம்.. ஆனால், ராதாரவி சார் தான் எங்களை அழைத்து, பொறுக்கிஸ் அல்ல நாங்கள் என டைட்டில் வைக்க சொன்னார்.. அவரது வேண்டுகோளை ஏற்று டைட்டிலை மாற்றினோம்” எனக் கூறினார்
சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசும்போது, ” ஒருவகையில் நங்கள் பொறுக்கிஸ் தான்.. அரசாங்கம் போடுற குப்பையை அள்ளிக்கிட்டு இருக்கிறோம்.. ரிலையன்ஸ் போடுற பிளாஸ்டிக்கை பொறுக்கிட்டு இருக்கிறோம்.. ஸ்டெர்லைட் ஆசிட் கழிவுகளை உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டு இருக்கிறோம். லேட்டஸ்ட்டா ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வார்த்தைகளில் எடுக்கும் வாந்தியையும் பிடித்துக்கொண்டு இருக்கிறோம். 
தமிழ்நாட்டை ஒரு பரிசோதனை சாலையாக பயன்படுத்தி வேட்டையாடிக்கொண்டு இருக்கிறார்கள். நமது முதல்வருக்கு மக்களை துன்புறுத்துவதில் விருப்பம் இல்லை.. மத்திய அரசின் அழுத்தத்தால் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.. அவர் கவலைப்பட தேவையில்லை.. அவரது துன்பங்களையும் நாங்கள் பொறுக்கி விடுவோம். உங்களை அன்றாடம் பாதிக்கும் விஷயங்கள் குறித்து அஞ்சு வரிகளில் ஒரு கடிதம் எழுதி பிரதமர், முதல்வர், கலெக்டர் என அனைவருக்கும் தினசரி தொடர்ந்து அனுப்புங்கள்.. நிச்சயமாக அதன்மூலம் மாற்றம் வரும்” எனக் கூறினார்.
ஜே.கே.ரித்தீஷ் பேசும்போது, “ராதாரவியின் அழைப்பை ஏற்றுத்தான் இந்த விழாவுக்கு வந்துள்ளேன். எப்போதுமே சிறிய படங்களும், புதிய நடிகர்களும் வெற்றி பெறவேண்டும் என நினைப்பவன்.மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று நாங்கள் பொறுப்புக்கு வருவோம்.. இந்தப் படத்தில் பாடிய ஆலயமணிக்கு குறைந்தது பத்து படங்களிலாவது நான் வாய்ப்பு வாங்கித்தருவேன்” எனக் கூறினார்.
விழாவினை ஆர் ஜே ரொஃபினா தொகுத்து வழங்கினார்.