எனக்கு முதல்வர் பதவி பெரிதல்ல. ஓ.பன்னீர் செல்வம் என்ற சாதாரண மனிதரை பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. இப்போது நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார் என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். இந்த இயக்கத்தை பிரித்தாள நினைக்கிறார் ஓ.பன்னீர் செல்வம் என்றும் திடுக்கிடும் புகார் அளித்துள்ளார். அதிமுக நிர்வாகிகளுடன் போயஸ் தோட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனைக்கு பிறகு தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது சராமரியான புகார்களை முன் வைத்தார். எம்.ஜி.ஆர் மரணத்தின் போது ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அவமானங்களையும் நடந்த சம்பவங்களையும் பற்றி பேசிய சசிகலா, சென்டிமென்ட் ஆக தொண்டர்கள் மத்தியில் எடுத்துக்கூறினார். எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு கூடவே உறுதுணையாக இருந்தோம். அவர் அரசியலே வேண்டாம் என்று கூறினார். ஓ.பன்னீர் செல்வம் சாதாரண தொண்டராக இருந்தார். அவரை பெரியமனிதராக வைத்து அழகு பார்த்தார். இப்போது நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார். ஜெயலலிதா மரணத்தின் போதே கட்சியை உடைக்க பலர் சதி செய்தனர். நான்தான் உடனடியாக பதவியேற்க சொன்னேன். நான் நினைத்தால் அன்றே முதல்வராக பதவியேற்றிருக்கலாம். ஆனால் எனக்கு இருந்த துக்கத்தில் நான் அதை கண்டு கொள்ளவில்லை. இப்போது நடப்பது வேறு விதமாக இருக்கிறது. நான் முதல்வராக வேண்டும் என்று ஒரு நொடி கூட நினைக்கவில்லை. சட்டசபையில் நடந்த சம்பவங்கள் மனதை பாதித்தன. எம்ஜிஆரை விரட்டி அடித்த கட்சிக்காரர்களுடன். அவர் சகஜமாக பேசிக்கொண்டுள்ளனர். திமுகவினர் தூண்டி விட்டனர். ஆனால் அதற்கு ஓ.பன்னீர் செல்வம் மறுத்து எதுவும் பேசவில்லை. அப்போதே நாங்கள் முடிவு செய்யவில்லை. இந்த அரசாங்கம் இருக்க வேண்டும். அதற்காக என் உயிரையும் விடத்தயார். நிறைய போராட்டங்களையும் சந்தித்து வந்திருக்கிறோம். நீங்க எல்லாம் எங்களுக்கு தூசுதான். ஆயிரம் பன்னீர் செல்வங்களைப் பார்த்து விட்டு வந்திருக்கிறோம். நாங்க ஆட்சியைமைப்போம், சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறப்போம் என்று சசிகலா கூறினார். என்னால் எத்தனை செய்ய முடியுமோ அத்தனையும் நான் செய்வேன். எத்தனை ஆண்கள் வந்தாலும் ஒரு பெண்ணாக நான் சமாளிக்கத் தயார் என்றும் சசிகலா கூறினார்.