சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவை தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அருகே செயல்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளை மாற்று இடங்களில் திறக்க தமிழகத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதேபோல கேரளாவிலும் மூடப்பட்ட மதுக்கடைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் பல இடங்களில் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு பகுதியிலும் சமீபத்தில் பொது மக்களின் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையை இங்கிருந்து அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று ஏராளமான பெண்களும் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் போத்தன்கோடு மதுக்கடையை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் போத்தன்கோடு போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு போராட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையும் நடத்தினர். ஆனால் மதுக்கடையை மூடும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று பெண்கள் தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். மேலும் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது அந்த மதுக்கடைக்கு குடிமகன்கள் மது வாங்க வந்தனர். இதை பார்த்ததும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அவர்களை மதுகுடிக்க வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவர்கள் மது வாங்கிச் சென்ற சம்பவமும் நடந்தது.
மேலும் பெண்களுக்கும் குடிமகன்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. இதற்கிடையில் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்ததால் போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதில் பொதுமக்கள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். சில போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியே போர்களம்போல காட்சி அளித்தது. பொதுமக்கள் மீது நடந்த இந்த தடியடிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.