தமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’

ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் முன்னணி வேடத்தில் தமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’

பல வெள்ளி விழா திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், முதல் முறையாக திரைப்பட தயாரிப்பில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறது.

ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தனது முதல் தயாரிப்பிலேயே பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆழமான கதையை திகில் மற்றும் நகைச்சுவை கலந்து ஒரு ஜனரஞ்சகமான படமாக படைக்க இருக்கிறது. 

நயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்ற, பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் படமாக ஒரு திகிலான நகைச்சுவை கதையின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். 

‘அதே கண்கள்’ வெற்றி திரைப்படத்தின் மூலம், தனது வித்தியாசமான அணுகுமுறையால் மக்களை பெரிதும் கவர்ந்த இயக்குனர் ரோகின் வெங்கடேசன், இத்திரைப்படத்தை இயக்குகிறார். 

இப்படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்தியன், காளி வெங்கட், மற்றும் சின்னத்திரை புகழ் டிஎஸ்கே என பலமான நகைச்சுவை கூட்டணியுடன், ஒரு சவாலான கதாபாத்திரத்தில், திகிலாக வலம் வருகிறார் தமன்னா. 

இவர்களுடன் பிரேம், ஸ்ரீஜா, கே எஸ் ஜி வெங்கடேஷ், பேபி மோனிகா மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நிச்சயம் இருக்கும். அதை தீர்க்கும் நோக்கில் ஒவ்வொருவராக இணைந்து, இறுதியில் ஒரு பலமான கூட்டணியாக சேர்ந்து, தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த பிரச்சனை தீர்ந்ததா, அந்த பிரச்சனைகளுக்கு காரணம் யார், அதை அவர்கள் எப்படி வெற்றி கொண்டார்கள் என்பதை நகைச்சுவையும் திகிலும் கலந்து ஜனரஞ்சகமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ரோகின். 

டேனி ரேமண்ட் ஒளிப்பதிவில், லியோ ஜான் பால் படத்தொகுப்பில், வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இந்த திகிலான நகைச்சுவைக்கு ஜி ஆர் சுரேந்தர்நாத் வசனம் எழுத, சண்டை பயிற்சிக்கு ஹரி தினேஷ் பொறுப்பேற்று இருக்கிறார்.