பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை நேற்று குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 காசுகள் குறைக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் பெட்ரோல் விலை, ரூ.61.87–ல் இருந்து ரூ.61.13 ஆக குறைந்தது.இதுபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டது. டெல்லியில் டீசல் விலை ரூ.49.31–ல் இருந்து ரூ.48.01 ஆக குறைந்தது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.இதுகுறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெட்ரோல், டீசலின் சர்வதேச உற்பத்தி விலை குறைந்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும் அதன் பலனை பொதுமக்களுக்கு அளிக்கும்வகையில் விலை குறைப்பு செய்துள்ளோம். இனி மேற்கண்ட நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, அடுத்த விலை மாற்றத்தின்போது அதை செயல்படுத்துவோம்’ என்று கூறப்பட்டுள்ளது.பெட்ரோல் விலை கடந்த மார்ச் 17–ந்தேதி ரூ.3.07–ம், ஏப்ரல் 4–ந்தேதி ரூ.2.19–ம் உயர்த்தப்பட்டது. டீசல் விலை தொடர்ந்து 4 தடவை உயர்த்தப்பட்டது. இப்படி உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.