ஜெயலலிதா திருவுருவப்படம் சட்டசபையில் திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பா?

 

முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் இதயங்களைவிட்டு மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்.புரட்சித் தலைவி அம்மா அவர்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த இன்னொருதாய் என்று தமிழக மக்கள் எல்லோரும் அன்று மனம் நிறைந்து வாழ்த்தினார்கள். இன்றும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அம்மா அவர்களுடைய சிந்தனை, செயல் எல்லாமே தமிழர்கள்தான், தாய்மார்கள்தான், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன் மாநிலமாக ஆக்குவதற்காக ஓய்வில்லாமல் உழைத்து உயர்த்திக் காட்டியவர் அம்மா அவர்கள். மாண்புமிகு அம்மா அவர்களின் துணிச்சல், வீரம், அறிவாற்றல், நிர்வாகத்திறன், இவை அனைத்தையும் தமிழ்நாட்டின் நலனுக்காகவே அர்ப்பணித்தார். 1991ஆம் ஆண்டிலிருந்து அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுதெல்லாம், அவர் தமிழக மக்களுக்காக வழங்கிய சாதனைத் திட்டங்கள் ஏராளம். பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு, தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேகரிப்புத் திட்டம், இவை என்றுமே மக்கள் மனங்களை விட்டு மறையாத திட்டங்கள். விலையில்லா 20 கிலோ அரிசி, தாலிக்குத் தங்கம், கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரம் உயர, கறவை மாடுகள், ஆடுகள். இவை ஏழை, எளியவர்களின் இதயங்களை ஆனந்தத்தில் ஆழ்த்திய திட்டங்கள்.

மாணவ-மாணவிகளுக்கு அம்மா அவர்கள் வாரி வழங்கிய திட்டங்களால் வாழ்த்திக் கொண்டிருக்கும் நெஞ்சங்கள் கோடான கோடி, தண்ணீரில் மிதந்து, கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த மீனவர்களின் நிம்மதியை மீட்டுக் கொடுத்தவர். மீன்பிடி தடைக்காலங்களில் அள்ளிக் கொடுத்தவர். காவேரிப் பிரச்சினையில் வரலாற்றுத் தீர்ப்பை பெற்றுத் தந்தவர். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தொடர்ந்து வாதாடிப் போராடி, அணையின் நீர்மட்டத்தை உயர வைத்து, தென்மாவட்ட விவசாயிகளின் வேதனையைத் தீர்த்தவர். இலங்கையிலே நம் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் இனம் பாதுகாப்பாக வாழ்வதற்காகப் பாடுபட்டவர். அதற்காக சட்டமன்றத்திலே வரலாற்றுத் தீர்மானங்களைப் போட்டவர். புரட்சித் தலைவரின் லட்சியங்களை, கொள்கைகளை இதயத்தில் ஏந்தி, ஏழை, எளியோரின் வேதனைகளைத் துடைத்து, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர் அம்மா அவர்கள்.

“மக்கள் குரலே மகேசன் குரல்” என்று சொல்லுவார்கள். அந்த மக்களிடமிருந்து எந்த எதிர்ப்புக் குரலும் வரவில்லை. “தெய்வத்தின் விக்ரகம் கோவிலிலே இடம் பெறக்கூடாது” என்று பக்தர்கள் சொல்லவேமாட்டார்கள். தமிழகத்தை வளமாக்கிய புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்படும் அந்தப் பொன்னாள் எப்பொழுது வரும் என்றுதான் தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழினம் வெறுத்து ஒதுக்கிய சிலர், தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட சிலர் மட்டும்,

கொஞ்சம்கூட அரசியல் நாகரீகமே இல்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் கல்லூரிகள் திறந்து, பாடம் நடத்தினாலும் அவர்களுக்கு அரசியல் நாகரீகம் வரவே வராது. ஏற்கனவே ஆண்ட சிலருக்கும், இனி ஆள நினைக்கும் சிலருக்கும், தலைசிறந்த முன்னுதாரணம் மாண்புமிகு அம்மா அவர்கள். பலருக்கு அரசியல் பாடமாகத் திகழ்பவர் மாண்புமிகு அம்மா அவர்கள் அவர்களின் திருவுருவப் படம் சட்டமன்றத்திலே திறக்கப்படுவது, சட்டமன்றத்திற்குப் பெருமை., தமிழ் நாட்டுக்கே பெருமை., ஏன்., உலக தமிழர்களுக்கே பெருமை. அந்த பெரும் புகழ் மாண்புமிகு அம்மா அவர்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்று பொறாமையால் புழுங்கி, சிலர் கூறும் கருத்துக்கள் மக்கள் மத்தியிலே எடுபடவில்லை என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்து போனவர்கள், சட்டமன்றத்தின் மாண்பு பற்றிப் பேசும் அநாகரீகச் செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏழரைக் கோடி தமிழக மக்களின் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரைக் கோடி விசுவாசமிக்க தொண்டர்களின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.