பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். பிரதமர் மோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, நிதி மந்திரி அருண்ஜெட்லி உள்ளிட்ட மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு –
* முதல் முறையாக மத்திய பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
* ஏழைகள், நலிந்தவர்கள், தலித் மக்களின் நலனை முன் வைத்தே அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்காகவே மத்திய அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகிறது.
* சமூக நலத்திட்டங்கள் மூலம் 13 கோடி பேர் பலன் பெற்றுள்ளனர். ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
* சுய உதவி குழுக்களுக்கு நடப்பாண்டில் ரூ.16,000 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது.
* முத்ரா திட்டம் மூலம் இதுவரை ரூ.5.6 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* ஏழைகளின் வீடு தேடி வங்கிச் சேவை அளிக் கும் வகையில் தபால் வங்கிச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
* இதுவரை ரூ.20 கோடி பேருக்கு ரூபே கார்டு வழங்கப்பட்டுள்ளது.
* தரமான மருந்துகள் அனைவருக்கும் கிடைக்க அவற்றின் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* சுதந்திரம் அடைந்தது முதல் நாடு முழுவதும் 18,000 கிராமங்கள் இருளில் மூழ்கி கிடந்தன. இதில் 11,000 கிராமங்களுக்கு குறுகிய காலத்தில் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
* வீடு இல்லாத ஒவ்வொருவருக்கும் இந்த அரசு வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

* உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. இதில் பயனடையும் 1.5 கோடி பேரில் 37 சதவீதம் பேர் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் ஆவார்கள்.
* பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 20 லட்சம் இளைஞர்கள் பயன் அடைந்துள்ளனர்.
* நம் நாட்டு இளைஞர்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில் அவர்களது திறனை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 50 இடங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
* தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய அவர்களுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்படும்.
* அரசு ஊழியர்களுக்கான பிரசவ கால சலுகைகள் அளிக்கப்படும் வகையில் சட்டத்தின் மூலம் மறுசீரமைக்கப்படும். பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படும். வேலை வாய்ப்புகள் மேம்படுத்தப்படும்.
* எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர் உருவாக்கப்படுவார்கள். இதன் மூலம் 2 லட்சம் பெண்கள் பயன் அடைவார்கள்.
* அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதன் மூலம் ஊழலை ஒழிக்க வகை செய்யப்பட்டு உள்ளது. எளிமையான நடைமுறைகள் மூலமும், சரியான சட்டத்தின் மூலமும் ஊழல் அடியோடு ஒழிக்கப்படும். கருப்பு பணம், ஊழல், தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை போன்றவை தடுக்கப்பட்டுள்ளது.
* நமது நாட்டின் பாதுகாப்பு படையினரை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம். எல்லையில் ஊடுருவலில் ஈடுபட்டவர்களுக்கு நமது படை வீரர்கள் நடத்திய துல்லியமான தாக்குதல் மூலம் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டு இறுதிக்குள் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து மீட்டர் கேஜ் ரெயில் பாதைகளும் அகலப் பாதையாக மாற்றப்பட்டு விடும்.
* தேர்தல் காலங்களில் பண பலத்தை கட்டுப்படுத்த பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த வேண்டும்.
* சுதந்திரமான தேர்தல் மூலம் வளர்ச்சி திட்டங்கள் தடையில்லாமல் நடைபெறும். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாது. அரசு ஊழியர்கள் அடிக்கடி தேர்தல் பணியில் ஈடுபடுவதால் ஏற்படும் மனிதவள ஆற்றல் இழப்பு குறையும்.
* வருகிற புதிய நிதி யாண்டில் மத்திய அரசு தேர்தல் கமி‌ஷனுடன் ஆலோசனை நடத்திய பின்பு இதில் வரவேற்கத்தக்க நல்ல முடிவு எடுக்கப்படும்.
* வடகிழக்கு மாநிலங்களில் இடது சாரி தீவிரவாதிகள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையால் அங்கு நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளது.
* காஷ்மீரில் ஊடுருவல், தீவிரவாத செயல்கள், உயிர் இழப்புகள் கவலை அளிக்க கூடியதாக உள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அவரது ஆங்கில உரையை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி இந்தியில் வாசித்தார்.