படம் எடுக்க கோடிகள் முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம் : இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது,

“இந்த இயக்குநர் முருகன் பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார்.சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆண்டுகளாக சினிமாவை ரசித்து வருகிறேன் அவ்வளவுதான். மற்றபடி நான் சினிமாவைப் பற்றி ஏதும் நினைத்ததில்லை.
அவர் ஒரு இயக்குநராக என்னை அணுகிய போது நான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து வந்தார்.ஒரு நாள் சுருக்கமாகக் கதை சொன்னார். அப்படி அவர் சொன்ன போது உடனே நான் செய்யலாம் என்றேன்.
படத்தின் முதல் பாதியில் சிரித்து வயிறு வலிக்கும்,இரண்டாவது பாதில் பயத்தில் நெஞ்சு வலிக்கும் என்றார்.அது எனக்குப் பிடித்தது படம் எடுக்க ஒப்புக்கொண்டேன்.
இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அனைவரும் நன்றாக உழைத்துள்ளார்கள்” என்றார்

இணைத் தயாரிப்பாளர் ந. ராசா பேசும்போது,

“பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட எனக்கு பாடல் ஆசிரியராகும் ஆசை இருந்தது. இந்த முருகன் அறிமுகத்தில் இதற்கு முன்பு இரண்டு படங்களில் பாடல் எழுதி விட்டேன்.இது மூன்றாவது படம். இதில் நம் இந்தக் காலத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் , வாட்ஸப் காலத்து இளைஞர்களுக்கு ஏற்றபடி வார்த்தைகளைப் போட்டுப் பாடல் எழுதி இருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஈ.கே.முருகன் பேசும் போது,

” இந்த பார்க் படத்தின் மூலம் தயாரிப்பாளர் எனக்குக் கொடுத்தது வாய்ப்பு அல்ல வாழ்க்கை . பொதுவாக இது மாதிரி ஹாரர் படங்களில் பேய்களை விரட்ட மதத்து சாமியார்களைக் கொண்டுதான் விரட்ட வைப்பார்கள்.நான் அதிலிருந்து விலகி ஒரு சாதாரண ஒரு நபர் மூலம், சாலையில் செல்லும் நபர் மூலம் ஓட்ட வைத்துள்ளேன்.அந்த உத்தி தான் தயாரிப்பாளரைக் கவர்ந்தது.
முதலில் தயாரிப்பாளர் வைத்து நான் இரண்டு குறும்படங்கள் எடுத்தேன் அதை லட்சக்கணக்கான பேர் பார்த்து அவருக்கு ஒரு வருமானம் வந்தது. அந்த நம்பிக்கையில் தான் திரைப்படத்தில் இறங்கினார்.அதன் பிறகு இந்தப் படம் எடுத்து இதோ உங்கள் முன் வந்து விட்டோம்.இந்தப் படத்திற்காக அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது” என்றார்.

நடிகை ஸ்வேதா டோரத்தி பேசும் போது,

” அண்மையில் வெளியான லாந்தர் படத்துக்குப் பிறகு விரைவிலேயே பார்க் படத்தின் மூலம் படத்தின் மூலம் உங்கள் முன் நிற்கிறேன் . மகிழ்ச்சி.பார்க் படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவரும் திரையரங்கு சென்று படம் பார்த்து ஆதரிக்க வேண்டுகிறோம்” என்றார்.

சிறு பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்பழகன் பேசும்போது,

” சாதாரணமாகப் படத்தில் பணியாற்றியவர்கள்தான் அந்தப் படத்தை நன்றாக இருக்கிறது என்பார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு சென்சார் ஸ்கிரிப்ட் எழுதியவர் கூட படம் நன்றாக இருக்கிறது என்றார். அதனால் படத்தின் மீது ஒரு நம்பிக்கை இருக்கிறது. சினிமாவில் இப்போது படம் எடுக்க 500 கோடி , 400 கோடி, 200 கோடி என்று கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை எடுக்கிறார்கள். எல்லாமா ஓடி விடுகின்றன?அவர்கள் 10 கோடிக்குள் எடுத்தால் 50 படங்கள் எடுக்கலாம். அப்படிப் படம் எடுத்து பலருக்கும் வாய்ப்பு அளிக்கலாம். 50 நடிகர்களை உருவாக்கலாம்; 50 இயக்குநர்களை உருவாக்கலாம்.
ஏன் அதைச் செய்வதில்லை?” என்றார்.

கதாநாயகன் தமன் குமார் பேசும் போது,

” இந்தப் படத்தின் மூலம் இந்த படத்திற்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகி விடுவார்.படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நடிகராகி விடுவார். அந்த அளவிற்கு அவர்கள் இந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் முருகன் நன்றாக நடிப்பார் .அவருக்கு நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடித்தது நல்ல அனுபவம் .ஒரு நொடி படத்திற்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது. ஆனால் படப்பிடிப்பின் போது இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் எடுத்தார்கள். நான் நடித்தேன்.
இரண்டு பாத்திரங்களையும் என்னால் மறக்க முடியாது.படத்தில் பணியாற்றிய அனைவரும் ஏதோ தங்கள் சொந்தப்படம் போல் நினைத்து உழைத்தார்கள்.
உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் மரியாதை இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தப் படம் ஜெயிக்கும்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,

“இந்த பார்க் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் போது கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் எடுத்துள்ளார்கள். என்னைவிட வயதானவர்கள் எல்லாம் கதாநாயகனாக நடிக்கும் போது ,எனக்கு மட்டும் அமைச்சர் முதல் மந்திரி என்று வேடம் கொடுக்கிறார்கள் .எனக்கும் இப்போது கதாநாயகன் ஆசை வந்துவிட்டது. தமன் போன்றவர்கள், கதாநாயகர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்க்கும் போது எனக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.நான் இயக்கிய போதே நடிக்க வாய்ப்பு வந்தது. என் உதவி இயக்குநர்கள் பொறாமையால் தடுத்து விட்டார்கள்.

எத்தனைக் கோடியில் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். அது அவரவர் விருப்பம் .ஆனால் அதைவிட அதில் நல்ல கதை இருக்க வேண்டும், திரைக்கதை இருக்க வேண்டும். எது இருக்க வேண்டுமோ அது இருக்க வேண்டும். நான் கிழக்கு வாசல் ஒன்றரை கோடியில் எடுத்தேன், சின்ன கவுண்டர் இரண்டரைக் கோடியில் எடுத்தேன், எஜமான் நான்கு கோடியில் எடுத்தேன் .அதனால் கோடி என்பது பிரச்சினை இல்லை அதில் என்ன கதை இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

சினிமாவில் வருவதற்கு கஷ்டப்படுகிறார்கள். கஷ்டம் அனுபவத்தைத் தரும். அந்த அனுபவம் தான் நமது வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் . எனக்கும் பாடல் எழுத வாய்ப்பு வருகிறது. எல்லாம் ஐட்டம் பாடல்களாக இருக்கின்றன.இன்று வருவதெல்லாம் உயிர் இல்லாத பாடல்களாக உள்ளன. நல்ல மெட்டு கொடுத்தால் தான் நல்ல வரிகள் எழுத முடியும், இது எனது அனுபவம் “என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“இப்போது இயக்குநர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம் .அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார் .இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார்.நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம். இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்.

இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன்.கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள். பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா அப்படி இருக்கிறார்.

சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை.

இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது.நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை எல்லாம் கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம் .உங்களையும் வரவேற்போம்” என்றார்

இயக்குநர் சிங்கம் புலி பேசும்போது, தனது முன் கதையை எல்லாம் சினிமாவில் சிரமப்பட்ட கதையை எல்லாம் சொன்னார்.தொடர்ந்து அவர் பேசும்போது,

“நான் போட்டோ ஸ்டுடியோவில் பிலிம்களை டெவலப் செய்யும் டார்க் ரூமில் ஆறு மாதம் தங்கி இருந்தேன். ஒன்றுமே பார்க்க முடியாது. லைட் போட மாட்டார்கள் சின்ன சிவப்பு விளக்கு மட்டுமே எரியும்.எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது.

இப்படி எல்லாம் சிரமப்பட்டுத் தான் சினிமாவுக்கு வந்தோம். இப்படிச் சிரமப்படுவது பிற்காலத்தில் நன்றாக இருப்பதற்காகத்தான். இந்தக் கதாநாயகன் தமன் வெளிநாட்டில் ஏர்லைன்ஸில் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் .அதையெல்லாம் விட்டுவிட்டுச் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

தமன் நன்றாக இருக்கிறார் நன்றாக நடிக்கிறார். அவருக்கு என்ன குறைச்சல்? இவ்வளவு நாள் தனக்காக அவர் காலத்தைச் செலவிட்டு உள்ளார். இனி அதற்குப் பலன் உண்டு.சினிமா அவரைக் கைவிடாது .ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமா இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கும். தலை சீவ முடியாத அளவிற்கு அடர்த்தியான முடி கொண்டவர்களுக்கும் தலையில் முடியே இல்லாது தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் .எனக்குப் பாட்டு பாடப் பிடிக்கும் ஆனால் டப்பிங் நடக்கும் போது நான் இடைவேளையில் பாடினால் விடவே மாட்டார்கள்.”என்று பேசியவர் ,சங்கீத ஜாதி முல்லை பாடலைப் பாடி அந்த விழாவுக்கு கலகலப்பூட்டினார்.

விழாவில் இயக்குநர் சரவண சுப்பையா,படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அஜய் பிலிம் பேக்டரியின் அஜய், ஆடியோ வாங்கி இருக்கும் ட்ராக் மியூசிக் ஆரோக்கியராஜ்,உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வடிவேல், இசையமைப்பாளர் அமரா, ஒளிப்பதிவாளர் பாண்டியன் குப்பன், இரண்டாவது கதாநாயகி நீமாரே, இரண்டாவது கதாநாயகன் சுரேந்தர், வில்லன்னாக நடித்திருக்கும் விஜித் சரவணன்,நடிகர் பிளாக் பாண்டி, ரஞ்சனி நாச்சியார், சித்தா தர்ஷன், நடிகை ஜெயந்திமாலா, பாடலாசிரியர் கு.கார்த்திக், ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.