ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. இங்கு பறத்தலுக்கு பேதமற்ற சுதந்திரம் வேண்டும். அப்படியான சுதந்திரத்தைப் பேசும் படமாகவும் பற படம் தயாராகி இருக்கிறது. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பேசியதாவது,
இந்தப்படத்தைப் பற்றி ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப்படம் இருந்தது. படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். இந்தப் படத்திற்கான ஆதரவை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்” என்றார்.
படத்தின் ஒரு நாயகனான நித்திஷ் வீரா பேசியதாவது,
இந்தப்படத்தைத் தொடங்கியது இயக்குநர் பா. ரஞ்சித் அண்ணன் தான். அவர் இந்த விழாவிற்கு வந்ததற்கு நன்றி. இந்தப்படத்தின் பாடல்கள் எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக இருக்கும். இயக்குநர் கீரா அவர்களோடு பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அது நடந்துள்ளது.” என்றார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது,
“இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவரது கொள்கையை ஓங்கிப் பேசி வருகிறார். இந்தப் பற படத்தில் pc ஆக்ட் பற்றி ட்ரைலரில் சொல்லி இருக்கிறார். அது இன்றைய சமகாலப் பிரச்சனை. சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப்படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்கள் வெற்றிப் பெறவேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாவிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதாலே அவர்களை குற்றம் சாட்டக்கூடாது” என்றார்.
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியதாவது
“பரபரவென்று இருப்பவர்கள் தான் பறக்க முடியும். அந்தப் பரபரப்பை எப்போதும் வைத்துக் கொண்டிருப்பவர் தம்பி சமுத்திரக்கனி. அவர் இந்தப்படத்தில் இருக்கிறார். அப்படியான பரபரப்பை கொண்டவர்கள் தான் தான் உயரப்பறக்கிறார்கள். அவர்கள் தான் பறக்கவும் வேண்டும். இந்தப்படத்தின் இயக்குநர் கீரா மிகத் திறமையானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் பற படம் வெற்றிக்கொடி கட்டிப் பறக்க வேண்டும்” என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
படத்திம் இயக்குநர் கீரா பேசியதாவது, “இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத் தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும் போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தப்பற படம் ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்றுக் நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது,
“இந்தப்படத்தில் நான் நடிக்க வந்த காரணம் பா.ரஞ்சித் தான். அவர் தான் கீராவை அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர் உங்களுக்கு என்றார். நான் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். இந்த இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர் தான் இயக்குநர் கீராவும். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டவர். இந்தப்படம் அற்புதமான படம். அருமையான பதிவு.” என்றார்
இப்படத்தில்சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடித்துள்ளனர்.
இயக்கம்; கீரா,
ஔிப்பதிவு; சிபின் சிவன்,
இசை; ஜார்ஜ் வி.ஜாய்,
பாடல்கள்; உமா தேவி, சினேகன்
எடிட்டிங்; சாபு ஜோசப்
கலை; மகேஷ்
தயாரிப்பு மேற்பார்வை; சிவசங்கர்
இணை தயாரிப்பு; s.p.முகிலன்
தயாரிப்பு; பெவின்ஸ் பால், ராமச்சந்திரன், ரிஷி கணேஷ்