நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர். அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு ‘ஆட்டோ’வை அன்பளிப்பாக அளித்துள்ளார்.. அதன் பின்னணியில் நெகிழ்வான ஒரு காரணமும் உண்டு.
திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், காசுகொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு பில் தொகையில் 10ரூ சலுகை, உதவி இயக்குனர்களுக்கு பாதிவிலையில் சாப்பாடு, வெளியூரில் இருந்து சினிமாவே கதியென தஞ்சம் பிழைக்க வந்து கையில் காசில்லாமல் வருவோருக்கு கூட பல சமயங்களில் இலவச சாப்பாடு என சேவை மனப்பான்மை கலந்து இந்த கவிஞர் கிச்சன் செயல்பட்டு வருகிறது.
இந்த ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகளை தினசரி கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வருவதற்காக வாடகை வாகனத்தை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் இதற்கு தன்னால் முடிந்த ஒரு உதவியை செய்யவேண்டும் என நினைத்த நடிகர் கஞ்சா கருப்பு, இந்த ஹோட்டலுக்காக சொந்தமாகவே ஒரு ‘ஆட்டோ’ வாங்கி அன்பளிப்பாக தந்துள்ளார். இனி மிச்சமாகும் அந்த வாடகைப்பணம் இன்னும் பலரின் பசியாற்ற உதவும் அல்லவா..?
கஞ்சா கருப்புவின் இந்த நல்ல மனசுக்கு ஏற்றபடி அவரது சினிமா கேரியரும் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஆம்.. தற்போது ‘சிலந்தி’ ஆதிராஜன் இயக்கிவரும் ‘அருவா சண்டை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் கஞ்சா கருப்பு. 7 மணி படப்பிடிப்புக்கு 6 மணிக்கே தயாராக வந்து நின்ற கஞ்சா கருப்புவின் பங்சுவாலிட்டியை பார்த்து யூனிட்டே மிரண்டதாம்.. இந்தப்படத்தில் இவரது நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது என படக்குழுவினர் பாராட்டி வருகின்றனர்.
இதுதவிர தற்போது லிங்குசாமி-விஷால் கூட்டணியில் உருவாகி வரும் ‘சண்டகோழி-2’ படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 20 நாட்களாக கலந்துகொண்டு நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு. மேலும் தனது நடிப்பில், வரும் டிச-15ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறார் கஞ்சா கருப்பு.