விசா அளிப்பதில் பாகிஸ்தானியர்களுக்கு கெடுபிடி

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற வரும் பாகிஸ்தானியர்களுக்கான விசா அளிப்பதில் கெடுபிடி காட்ட துவங்கி உள்ளது மத்திய அரசு. முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்தது, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இரண்டு ராணுவ வீரர்களை கொடூரமாக கொலை செய்தது உள்ளிட்ட காரணங்களால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் உருவாகி உள்ளது. 

இந்நிலையில், இந்தியாவிற்கு வர விரும்பும் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதில் மத்திய அரசு மறைமுகமாக கெடுபிடி காட்ட துவங்கி உள்ளது. விளையாட்டு வீரர்கள், கலைஞர்களுக்கு விசா அளிப்பதில் தாமதம் செய்யப்படுகிறது. இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற இதற்கு முன் பல ஆயிரம் பாகிஸ்தானியர்கள் வந்துள்ளனர். தற்போது இவர்களுக்கு கெடுபிடி காட்டப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு விவகார ஆலோசகர் சர்தஜ் அசீஸ் என்பவரிடம் பரிந்துரை கடிதம் வாங்கி வந்தால் தான் விசா வழங்க வேண்டும் என பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.