பாகிஸ்தான் சிறைகளில் சுமார் 8 ஆயிரம் கைதிகள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதற்கிடையில், மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை. உலகின் பல நாடுகள் இந்த மரண தண்டனையை ஒழித்துவிட்ட நிலையில் பாகிஸ்தானும் இது தொடர்பாக மறுஆய்வு செய்ய வேண்டும் என அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பினர். இது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாகவும், இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரையில் யாரையும் தூக்கிலிடக் கூடாது என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த 16-12-2014 அன்று பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளிக்குள் புகுந்த தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் அந்த பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132 பள்ளிக்குழந்தைகள் உள்பட 145 பேர் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மரண தண்டனையை ரத்து செய்து விட்டால் இதைப்போன்ற தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதிகள் செய்யும் தவறுகளுக்கு உரிய தண்டனையை அளிக்கவே முடியாது. எனவே, மரண தண்டனையை ரத்து செய்யும் ஆலோசனைக்கு இனி இடமே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் திட்டவட்டமாக அறிவித்தார்.
தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக தேங்கி கிடந்த வழக்குகளை விசாரிப்பதற்கென்றே அவசர சட்டத்தின் மூலம் சிறப்பு கோர்ட்டுகள் உருவாக்கப்பட்டன. இந்த அறிவிப்புக்கு பின்னர் தீவிரவாதம் மற்றும் தேசத்துரோக வழக்குகளில் தொடர்புடைய சிலர் அடுத்தடுத்து தூக்கிலிட்டு கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீசார் மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்திய மூன்று பேர் இன்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர். பஞ்சாப் மாகாணம், சஹிவால் மாவட்டத்தில் உள்ள உயர் பாதுகாப்பு மிக்க சிறையில் இன்று தூக்கிலிட்டு கொல்லப்பட்ட மூவரும் தலிபான் இயக்கத்துடன் தொடர்புடைய ஹர்க்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி இயக்கத்தை சேர்ந்த சைத் ஜமான் கான், ஷவாலே மற்றும் முஹம்மது ஜீஷான் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.