பகடி ஆட்டம் – சினிமா விமர்சனம்

நாயகன் சுரேந்தர் பெண்கள் விஷயத்தில் ரோமியோ. பார்க்கிற பெண்களையெல்லாம் அடையவேண்டும் என்ற எண்ணத்திலேயே சுற்றுபவர். இவருடைய அப்பா நிழல்கள் ரவி பெரிய செல்வந்தர், அம்மா ராஜஸ்ரீ பொறுப்பான குடும்பத் தலைவி. மகன் மீது அதிக பாசத்தை பொழிபவர். இந்நிலையில், சுரேந்தர் ஒருநாள் மோனிகாவை பார்த்ததும் அவள்மீது ஆசைப்படுகிறார். மோனிகாவின் குடும்பம் அவளுடைய அக்கா கௌரி நந்தா ஆட்டோ ஓட்டி கொண்டுவரும் பணத்தில்தான் பிழைப்பு நடத்தி வருகிறது. தனது குடும்ப சூழ்நிலையை மறந்த மோனிகா தன் மீது சுரேந்தர் காட்டும் அக்கறையை காதல் என்று நம்பி அவனது வலையில் விழுகிறாள். இதை அறிந்த கௌரி நந்தா, தனது தங்கையை அழைத்து கண்டிக்கிறாள். அக்காவின் கண்டிப்பில் மனம் திருந்திய மோனிகாவை தனது வழிக்கு கொண்டுவர சுரேந்தர் முயற்சி செய்கிறான்.

தனது அம்மாவிடம் அவளைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டதாகவும், அம்மாவிடம் வந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தனது வீட்டிற்கும் அழைத்து செல்கிறான். இதையெல்லாம் உண்மை என்று நம்பி செல்லும் மோனிகாவை, சுரேந்தர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவளை தன்வசப்படுத்தி நெருக்கமாக இருக்கிறான். அதை வீடியோவும் எடுத்துவிடுகிறான். இதனால், தனது மானம் பறிபோனதே என்று பதறும் மோனிகா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்கிறாள். தனது தங்கையின் இந்த பரிதாப முடிவுக்கு காரணமான சுரேந்தரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறாள் கௌரி நந்தா.

இந்நிலையில், சுரேந்தர் திடீரென காணாமல் போகிறார். அவரை கண்டுபிடிக்க நிழல்கள் ரவி தனது செல்வாக்கை பயன்படுத்தி கமிஷனர் அளவில் போய் பேசுகிறார். இதனால், சுரேந்தரை கண்டுபிடிக்க அசிஸ்டென்ட் கமிஷனரான ரகுமான் நியமிக்கப்படுகிறார். அவர் சுரேந்தரை தனது போலீஸ் மூளையால் கண்டுபிடித்தாரா? காணாமல் போன சுரேந்தர் என்ன ஆனார்? என்பதற்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

சுரேந்தர் பெண்கள் மீது மோகம் கொண்டவராக ஒரு ரோமியோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல், நாயகியான மோனிகாவும் தோற்றத்திலேயே நம்மை கவர்கிறார். பள்ளிக்கூடத்திலிருந்து கல்லூரிக்கு போகும் பருவத்தில் உள்ள பெண்ணுக்குண்டான உடல்மொழியில் தனது நடிப்பை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.  ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த ரகுமான், இந்த படத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

காணாமல் போன சுரேந்தரை கண்டுபிடிக்க இவர் வகுக்கும் வியூகங்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. ராஜஸ்ரீ, பையன் என்ன தவறு செய்தாலும், அது தனது மகன் செய்யவில்லை என்பதுபோன்ற வெகுளியான அம்மாவாக வலம் வந்திருக்கிறார். இவருடைய நடிப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சுரேந்தரின் தந்தையாக வரும் நிழல்கள் ரவி, தனது அதிகாரப் பலத்தால் ஆணவத்துடன் பேசும் இடங்களில் எல்லாம் மிளிர்கிறார்.  இயக்குனர் ராம் கே.சந்திரன், காதல் என்ற போர்வையில் பெண்களை நாசம் செய்யும் மோசமான இளைஞர்களுக்கு கடைசியில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இப்படத்தில் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். முதல் பாதி, சுரேந்தர் மற்றும் மோனிகாவின் பின்புலம் இதைப்பற்றியே கதை நகர்வதால், படம் மெதுவாக நகர்வது போல் தோன்றுகிறது.

ஆனால், பிற்பாதியில் ரகுமான் வந்தபிறகு, காணாமல் போனவனை கண்டுபிடிக்கும் விசாரணையில் படம் நகர்வதே தெரியாமல் செல்கிறது. முடிவும் எதிர்பார்த்தபடி அமைந்திருப்பது மிகச் சிறப்பு. கார்த்திக் ராஜா இசையில் அவரது அப்பா இளையராஜாவின் பாடல்களில் இரண்டை தனது பாணியில் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அந்த பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் கிரைம் திரில்லருக்குண்டான உணர்வை கொடுத்திருக்கிறது. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.