“மதுக்கடைகளை மூடச் சொல்லி பேசினால் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என யாரோ தந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் வரவிருக்கிற பொது தேர்தலின் பிரச்சார மேடைகளில் மதுவுக்கு எதிராக பேசக்கூடாது என சில அரசியல் கட்சிகள் முடிவெடுத்திருப்பதாக கேள்விப்படுகிறோம்” என கபிலன்வைரமுத்து கூறியிருக்கிறார். DVM சேவா பாலம் அமைப்பின் சார்பில் சிறந்த சமூகப்பணிகளுக்கான விருது வழங்கும் விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா மற்றும் அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்கள். தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக தனிப்பாடல் இயற்றிய கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. விழாவில் கபிலன்வைரமுத்து பேசியதாவது:
பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறவர்களைப் பரிதாபமாக பார்க்கக் கூடிய நம் சமூகத்தில் அந்த மூடப் பார்வையை மோதி மிதித்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளாக சேவை செய்துகொண்டிருக்கிறது பாலம் அமைப்பு. களத்தில் இறங்கி சேவை செய்பவர்களின் கரத்தில் இருந்து வரும் விருதை பெருமையாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மதுவினால் நிறைய சீரழிவுகளைப் பார்க்கிறோம். மது பழக்குக் கலாச்சாரம் ஒன்று உருவாகி வருகிறது. எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களோடு இலவச இணைப்பாக மது கொடுக்கப்படுமோ என அஞ்சுகிறோம். இந்த அச்சத்தின் அடிப்படையில் உருவான பாடல்தான் ஏந்திரு அஞ்சலி ஏந்திரு. பாலமுரளிபாலு இசையில் டி.ராஜேந்தர் பாடினார். மதுவுக்கு எதிரான பாடல் அரசுக்கு எதிரான பாடலாக பார்க்கப்பட்டதால் இந்தப் பாடலை உருவாக்கி வெளியிடுவதில் நிறைய சிரமங்கள் இருந்தன.
இந்தப் பயணத்தில் நிறைய படிப்பினைகள். மதுக்கடைகளை மூடச் சொல்லி பேசினால் மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என யாரோ தந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் வரவிருக்கிற பொது தேர்தலின் பிரச்சார மேடைகளில் மதுவுக்கு எதிராக பேசக்கூடாது என சில அரசியல் கட்சிகள் முடிவெடுத்திருப்பதாக கேள்விப்படுகிறோம். இந்தச் சுழல் மாறுவதற்கு பொதுவெளியில் கூடுதலான முயற்சிகள் தேவை. இன்று தமிழகமெங்கும் எத்தனையோ இளைஞர்கள் பல்வேறு உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். மக்களுக்காக போராடுகிறவர்கள் தனிமைப்பட்டுவிடக்கூடாது. அவர்களுக்கு மேடை தேவை. வெளிச்சம் தேவை. ஊடகம் தேவை. அத்தகைய இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என பாலம் போன்ற அமைப்புகளைக் கேட்டுகொள்கிறேன்” என்று பேசினார்.
விழாவில் அரசு ஸ்டேன்லி மருத்துவமனையின் முதன்மையர் பொன்னம்பல நமச்சிவாயம், மருத்துவர் ரமாதேவி, காவல்துறை கண்காணிப்பாளர் காஞ்சனா, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. பாலம் அமைப்பின் நிறுவனர் இருளப்பன் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் மாரிமுத்து விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.