விருப்பமில்லாமல் பார்த்தேன், வியந்தேன், உடனே படத்தை வாங்கினேன் முன்னோடி பட விழாவில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி.மதன் பேச்சு !

ஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் மற்றும் சோஹம் அகர்வால் எஸ் .பி.டி.ஏ.ராஜசேகர்  வழங்கும் படம் “முன்னோடி” . இப்படத்தை அறிமுக இயக்குநர் S.P.T .A. குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில்  வெள்ளிகிழமை நடைபெற்றது. விழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ்  பி. மதன் பேசும் போது, “பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றிப் பேசினார். அப்போது எனக்கு ஆர்வமே இல்லை. ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டு இருக்கிறது  வேண்டாம் என்றேன். வேற யாரிடமாவது பேசிப் பாருங்கள் விட்டு விடுங்கள்  என்றேன். பாடல்கள் , ட்ரெய்லரையாவது  பாருங்கள் என்றார்கள். வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன்.
முதலில் ‘அக்கம் பக்கம்’ பாடல் பார்த்தேன்.பிடித்திருந்தது. யாரிடம் வேலை பார்த்தீர்கள்? என்றேன். இல்லை என்றார். அவரிடம் பேசியபோது  பொதுவான விஷயங்கள் பேசினோம் . தன் குடும்பம் சம்பாதித்த பணத்தில் எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது. அவரது சினிமா ஆர்வம் சாதாரணமானது இல்லை. ‘முன்னோடி’  படம் தவிர வேறு இரண்டு கதைகளும் தயாராக வைத்து இருக்கிறார். சுதந்திரப் போராட்ட பின்னணியில் ஒரு திரைக்கதை வைத்து இருக்கிறார். பிரமாதமாக இருக்கும் . எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்த முன்னோடி  படம் வியக்க வைத்தது.  சற்றும் யோசிக்காமல் வாங்கி விட்டோம்.  வெளியிடுகிறோம். இப்படம் நன்றாகவே  வந்திருக்கிறது. ” இவ்வாறு மதன் பேசினார்.
‘முன்னோடி ‘ படத்தின் இயக்குநர்  குமார், பேசும் போது தன் மனக்குமுறலை வெளியிட்டார். அவர் பேசும் போது , ” நான் சினிமா பற்றிய எந்தவித பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். என் அப்பா சினிமாவே பார்த்ததில்லை. எனக்கும் சினிமா பார்க்க அனுமதியில்லை. சினிமா இயக்கம் பற்றித் தெரியாது. ஆனால் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது. 18 வயதில் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஆனால் அடுத்த் 18 வருஷம் கழித்து தான் சினிமாவுக்கு  அனுமதி கிடைத்தது. அதற்குள் மனைவி குழந்தைகள் என்று  குடும்பம் மாறியிருந்தது. இருந்தாலும் நான் விட வில்லை. ஒரு படம் இயக்க 18 வருஷம் காத்திருந்தேன்.  அப்போது என்னை சினிமாவில் விடவில்லை இப்போது நானே சம்பாதித்து என் காசில் எடுத்து இருக்கிறேன். இப்போதும்  கூட குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள்.
இந்தப் படத்துக்காக இரண்டு வருஷம் கஷ்டப்பட்டேன். என் கஷ்ட நஷ்டங்களை குடும்பத்தினர் பொறுத்துக் கொண்டார்கள். அவர்களின் கவலை நான் சினிமாவுக்கு வந்து சிரமப்  படக்கூடாதே என்பது தான். 18 வருஷம் சுமந்து கருவாகி உருவாகி வளர்ந்த குழந்தையை இரண்டு வருஷம் நெஞ்சில் சுமந்த அந்தக் குழந்தையை ஆடல், பாடல் , விளையாட்டு எல்லாம் தெரிந்த அந்தக் குழந்தையை சுதந்திரமாக விளையாட திறமை காட்ட அனுமதிக்கிறார்களா? இல்லை.
இவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தமும் சதையுமாக வளர்த்து இருக்கிறோம். ஆனால்  யாரும் பார்க்கத் தயாரில்லை. தியேட்டரில் போட்டால் பத்து பேர் வருவானா ? என்கிறார்கள். ஒவ்வொருவரும் இப்படி நெஞ்சில் குத்துகிறார்கள். நல்லா இருந்தாலும் பார்க்க  எவனும்  வர மாட்டான்  என்கிறார்கள். புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தால் கடலில் குதித்து சாக வேண்டுமா? நல்ல வேளை படத்தை எஸ்கேப்  ஆர்ட்டிஸ்ட் மதன் சார் பார்த்தார். எதுவுமே நினைக்கவில்லை.  நிஜமான அன்போடு அணுகினார் .ஆதரவு கொடுத்து இருக்கிறார். படத்தை வெளியிடுகிறார்.  அவருக்கு நான் காலமெல்லாம் கடமைப் பட்டிருக்கிறேன்.
 
இதில் நிறைய பேர் நடித்து இருக்கிறார்கள் இருந்தாலும் இது ஒரு டெக்னீசியன் படம் என்றுதான் சொல்வேன். என் அடுத்தடுத்த படங்களில்  நடிகர்கள் எல்லாம் மாறலாம். ஆனால் தொழில் நுட்பக் கலைஞர்களை மாற்ற மாட்டேன். அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். ”  இவ்வாறு இயக்குநர் குமார் பேசினார். இந்நிகழ்வில் ‘முன்னோடி ‘ படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜுனா , வினு கிருத்திக் , நிரஞ்சன் , சுமன் , சுரேஷ் , பாண்டியன் , நாயகி யாமினி பாஸ்கர் , நடன இயக்குநர் சந்தோஷ் , படத் தொகுப்பாளர்  என்.சுதா , இசை யமைப்பாளர் கே.பிரபு சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
மக்கள் தொடர்பாளர்  ஏ.ஜான்  அனைவரையும் வரவேற்றார்.