நிச்சயமாக, ஒவ்வொரு திரைப்படத்தின் முதல் பார்வையாளரும், முதல் விமர்சகரும் அதன் படத்தொகுப்பாளர் தான். எனென்றால் அவர்கள் தான் தொகுக்கப்படாத காட்சிகளையும், தெளிவாக திருத்தப்பட்ட காட்சிகளையும் பார்த்து படம் எப்படி வந்திருக்கிறது என்று படத்தினை துல்லியமாக கணிப்பவர்கள். ஏராளமான படங்களில் ஒரே நேரத்தில் வேலை செய்தாலும், அஜித்குமாரின் விஸ்வாசம் படத்தை சற்றே சிறப்பாக உணர்கிறார்.
விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து படத்தொகுப்பாளர் ரூபன் கூறும்போது, “விஸ்வாசம் ஒரு வெகுஜன திரைப்படம் என்பதையும் தாண்டி, பண்டிகைக்கான ஒரு அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இந்த பண்டிகை சீசனில் எல்லோருக்குமான ஒரு விருந்தாக அமையும் வகையில் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு விருந்து. விஸ்வாசத்தில் பணி புரிவது மிகவும் சவாலானது. இந்த படத்தின் கதை வேகமான திரைக்கதை, ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளை கொண்டிருக்கும். அதற்கேற்ற வகையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதி பதிப்பை கொண்டு வருவது மிகவும் சவாலாக இருந்தது. ஏனென்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகமாக்கவோ அல்லது குறைக்கவோ கூடாது, அதை சமநிலையில் வைக்க வேண்டும். சிவா மற்றும் தயாரிப்பாளர்களின் ஆலோசனையோடு நான் நிறைய பதிப்புகளில் வேலை செய்ய வேண்டியிருந்தது. பார்வையாளர்களின் ரசிப்புத் தன்மைக்கு ஏற்ப டிரெய்லரை கொடுத்ததில் ஒட்டு மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி” என்றார்.
ரூபன் படத்தில் மிகவும் ரசித்த விஷயங்களை பற்றி கூறும்போது, “படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக இருந்தது. குறிப்பாக மழையில் நடக்கும் அந்த சண்டைக்காட்சியும், இரண்டாம் பாதியில் நடக்கும் இன்னொரு சண்டைக்காட்சியும். அதில் அஜித் சார், எதிரிகளை அடித்து உதைக்கும்போது சில மாஸான பஞ்ச் டயலாக்குகளை சொல்வார். இந்த விஸ்வாசம் வெறும் மாஸான படம் என்பதையும் தாண்டி, ஒட்டுமொத்த குடும்ப பார்வையாளர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்” என்றார்.
சிவா இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.