‘தனி ஒருவன்’ பட இயக்குநர் மோகன்ராஜா பாராட்டிய குறும்படம்

‘தனி ஒருவன்’ படத்தின் இயக்குநர் மோகன்ராஜா பாராட்டைப் பெற்றுள்ள குறும்படமான ‘ஒரு மயிரும் இல்ல’ அனைவரின் கவனத்தைக் கவர யூடியூப் சேனலில் வெளிவருகிறது.
இப்படத்தை விக்னேஷ் ஷா எழுதி இயக்கித் தயாரித்துள்ளார். மணிகண்டன் வைத்தியநாதன் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஒளிப்பதி வு பிரகாஷ், இசை தரன், எடிட்டிங் ஸ்ரீநிக் விஸ்வநாதன் என்று நண்பர்கள் நலம் விரும்பிகளே தொழில்நுட்பத் துணைகளாகி உழைத்துள்ளனர்.
நாம் சாதாரணமாக உதிர்ந்து விழுவதுதானே என்று நினைக்கிற தலைமுடி கொட்டி தலை வழுக்கை நிலையை அடையும் ஒருவனின் வலியை, உளவியல் சிக்கலை, அவன் எதிர்கொள்ளும் போராட்டத்தினை அழகாக, கலகலப்பாக, சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் விக்னேஷ் ஷா. அந்தக் கதை நாயகன்   தன் முடி வளர பலவகை மருந்துகள், மூலிகைகள், ஷாம் பூக்கள் எல்லாம் போட்டு பலனின்றி “மயிரோடு வந்தால்தான் உயிரோடு வருவேன் “என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான். யாரோ சொன்னதை நம்பி முடி வளரக் கருங்குரங்கு ரத்தம் உதவும் என்று அதைத்தேடி காட்டுக்குள் செல்கிறான். அங்கே தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்கிறான். முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ். 
ஒரு முழு நீளத் திரைப்படத்துக்கான கதையை எடுத்துக் கொண்டு 10 நிமிடத்துக்குள் குறும்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ஷா .இப்படத்தைப் பார்த்த’ தனி ஒருவன்’ படத்தின் இயக்குநர் மோகன்ராஜா பாராட்டியதுடன் “எப்போ சினிமாவுக்கு வரப் போறே? சீக்கிரம் வா” என்று வாழ்த்தியிருக்கிறார். மற்றும் இக்குறும்படத்தை பார்த்த இயக்குனர் ரத்தின சிவா பாராட்டியுள்ளார்.
விரைவில் இயக்கவுள்ள தன் திரைப்படத்துக்கான கதையமைப்பு, முன் தயாரிப்பு என மும்முரமாக இருக்கும் தன்னை யாரும் சம்பிரதாயமாக வாழ்த்த வேண்டாம். இக்குறும்படத்தைப் பார்த்துவிட்டு மதிப்பெண் போட்டு விட்டு வாழ்த்தட்டும் என்கிறார் நம்பிக்கையுடன்.
விக்னேஷ் ஷா சினிமாவுக்கான படை திரட்டி வருகிறார். விரைவில் போர் தொடுப்பார் என்று நம்பலாம்.