“மனப்பொருத்தம் பார்க்காவிட்டால் வாழ்க்கை சிக்கல் தான்” ; ‘ஒரு குப்பை கதை’ விழாவில் அமீர் பரபரப்பு பேச்சு..!
பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி..
மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.
இந்த விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, “குப்பை அள்ளக்கூடிய மனிதர்களை கதையின் நாயகர்களாக்கியதற்கும், அந்த கதாநாயகனாக அதினேஷ் மாஸ்டரை நடிக்க வைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.. குப்பியில் தான் என்னென்ன கிடக்கின்றன..? குப்பை ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும். தினேஷ் மாஸ்டர் என் படங்களுக்கான நாயகன் போல தெரிகிறார். அவர் மூலமாகத்தான் ‘தர்மதுரை ‘மக்க கலங்குதப்பா’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது” என்றார்.
இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, “ரெட் ஜெயன்ட் மூவிஸ், குறிப்பாக செண்பகமூர்த்தி சார் ஒரு படத்தை வாங்குகிறார் என்றால் நிச்சயம் அந்தப்படம் வெற்றி அடையும்.. பட தயாரிப்பில் கூட சில சமயம் அசந்துவிடுவார். ஆனால் படங்களை வாங்கி வெளியிடுவதில் கெட்டிக்காரர்.” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாக தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருடம் வெற்றிகரமாக ஓடிவிட்டது. இதில் நல்ல படங்கள், ஆவரேஜ் படங்கள், சில மட்டமான படங்களை கூட கொடுத்துள்ளோம்.. ஆனால் இந்தப்படம் மைனா போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம்..
நான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து எனது படங்களில் இடம்பிடித்தாரோ அதேபோல தினேஷ் மாஸ்டரும் என் படங்களில் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். மாஸ்டராக இருக்கும்போது சரியான நேரத்திற்கு வந்தவர், இப்போ ஹீரோ ஆனதும் லேட்டா வர ஆரம்பிச்சுட்டார் போல.. என்ன மாதிரி சிலபேர்க்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்து என்னடா இவனுங்க இப்படி ஆடுறாங்கன்னு, அந்த கோபத்துலே இதுல நல்லதா நாலு டான்ஸ் ஆடியிருப்பார்னு நினைக்கிறன்..
தப்பான படங்கள் கொடுத்தால் திட்டுகிறீர்கள்.. கழுவி ஊற்றுகிறீர்கள். அதேசமயம் நல்ல படங்களை கொடுக்கும்போது நீங்கள் எங்களுக்கான வரவேற்பை கொடுங்கள்.. இல்லாவிட்டால் எங்களுக்கும் கோபம் வரும்” என்றார்.
நடிகர் ஆர்யா பேசும்போது, “என்னை மாதிரி ஆட்களுக்கு தினேஷ் மாஸ்டர் தான் வசதி.. எனக்கு ரிகர்சல் கொடுத்து ஆடச்சொல்வார்.. அப்படியும் செட்டாகலைன்னா, அவரோட குரூப்ல இருக்குறவங்களை கூப்பிட்டு, ஆர்யா எப்படி ஆடுறாரோ அதை நீங்க பாலோ பண்ணிக்குங்கன்னு சிம்பிளா வேலையை முடிச்சுடுவார். நான் உட்பட எத்தனையோ பேர் அவரை ஹீரோவா நடிங்கன்னு சொன்னபோது எல்லாம் மறுத்துவிட்டார்.. அப்படிப்பட்டவர் இந்தப்படத்தில் நடித்துள்ளார் என்றால் நிச்சயம் இதில் ஏதோ விஷயம் இருக்கும். இந்தப்படத்தை பார்க்கும்போது தினேஷ் மாஸ்டர் ரியலிஸ்டிக்கா நடிச்சிருக்கார்” என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன்மூலம் தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்யமுடியும். விஜய் டிவி ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன்.. ஆனால் எதிர்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார்.. ஒரு துறைல இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்ய்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்.. அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு போகவேண்டும்..நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப்படத்தை வாங்கியிருப்பது, மற்றவர்கள் எல்லாம் இந்தப்படத்தில் உங்கள் படத்தை பாராட்டுவது என 5௦ சதவீதம் தாண்டி விட்டீர்கள்.. மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் நூறு சதவீதம் வெற்றியை அடைவீர்கள்” என வாழ்த்தி பேசினார்.
இயக்குனர் அமீர் பேசும்போது, “இந்தப்படத்தின் கதை தயாரிப்பாளர் அஸ்லம் மூலம் என்னிடம் முதலில் வந்தது. கதைகேட்ட பின் இயக்குனர் காளி ரங்கசாமியிடம் சில மாற்றங்கள் செய்தால் நடிக்கலாம் என சொன்னேன்.. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக அஸ்லம் சொன்னார்.. ஆனால் ஒரு இயக்குனராக அவரது உறுதியான முடிவை பாராட்டுகிறேன்.
சுசீந்திரன் சொன்னமாதிரி இது எல்லா மனிதர்களும் கடந்துபோகக்கூடிய கதையாக இருக்க கூடாது.. யாரும் கடந்து போகக்கூடாத கதையாக இருக்க வேண்டும். பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைக்கிறவர்கள் மனப்பொருத்தம் பார்ப்பதை மட்டும் விட்டுவிடுகிறார்கள். அதேசமயம் பொருத்தம் இல்லாத காரணத்திற்காக வேறு வழியை தேடி போகவும் கூடாது. ஊரைக்கூட்டி தடபுடலாக செலவுசெய்து திருமணம் நடத்துவது தேவையற்றது.. அதுவே ஒரு கட்டத்தில் பொருந்தாதா வாழ்க்கையையும் கட்டாயத்தில் வாழும்படி ஆகிவிடும்.
சினிமாவில் ஒரு சிலர் மட்டும் ஆரம்பத்தில் பார்த்த அதே உடல்மொழியுடன் இருப்பார்கள்.. ரஜினி, சிவகார்த்திகேயன், ஆர்யா இந்த வரிசைல தினேஷ் மாஸ்டரும் எப்பவும் ஒரேமாதிரியான உடல்மொழியுடன் தான் இருப்பார். இந்த நேரத்தில் சத்யம் திரையரங்கு நிறுவனத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.. இங்கே சினிமாவில் இசைவெளியீட்டு விழாவை சத்யம் தியேட்டரில் நடத்தவே விரும்புகிறார்கள்.. அதனால் கொஞ்சம் கெடுபிடிகளை குறையுங்கள்” என்றார்.
படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் பேசும்போது, “இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. இந்தப்படத்தில என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க.. என்னைய ஹீரோவா போட்டா என் உயரத்துக்கு கதாநாயகியே கிடைக்காதுன்னு டைரக்டர்கிட்ட சொன்னேன்.. என் மனைவியுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. கதை, ஒரு மாதிரியான கதைதான்.. டான்ஸ் அப்படி இப்படின்னு இருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பேன்” என்றார்.