ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவதே நோக்கம் என ஓ.பி.எஸ். பேச்சு

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தம்பிதுரையை சந்திக்க பிரதமர் விரும்பவில்லை. தம்பிதுரைக்கு பிரதமரை சந்திப்பதற்கு எப்படி அனுமதி பெற வேண்டும் என்பது தெரியவில்லை. முதலமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எனக்கு பல தரப்பிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவதே நமது நோக்கம்.

அதற்கான முதல் படியே உண்ணாவிரதம். ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை நடைமுறைகள் என்னை வேதனைப்பட வைத்தது. அவர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தீரும் வரை தர்மயுத்தம் தொடரும். ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.  ஜெயலலிதாவை வெளிநாட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றோம். எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதற்கு அனுமதிக்கவில்லை. அவருக்கு தீவிர நோய் எதுவுமில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் தமிழக மக்களுக்கு சந்தேகம் உள்ளது. உயிருடன் இருக்கும் வரை சசிகலா உறவினர்களை கட்சியில் அனுமதிக்க மாட்டேன் என ஜெயலலிதா சொன்னார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.