கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பது குறித்து வணிகர்களுடன், காவல்துறையினர் ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. டி.எஸ்.பி.முருகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து எடுத்துரைத்து வணிகர்களிடம் கருத்து கேட்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் ராதாகிருஸ்ணன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்,வணிகர்கள், போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் டி.எஸ்.பி.முருகவேல் செய்தியாளர்களிடம் பேசுகையில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக சோதனை முறையில் பழைய பஸ் நிலையம் முதல் ரெயில் நிலையம் வரையிலும், மார்க்கெட் சாலையிலும் ஒன் சைடு பார்க்கிங் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், வணிகர்கள் தங்களது ஊழியர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும், நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க காவல்துறையினர் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு பொதுமக்களும் , வணிகர்களும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.