வேல்ஸ் பல்கலைக்கழகமும் (பல்லாவரம்) மஹா ஹேர் மற்றும் பியூட்டி அகாடமியும் (மயிலாப்பூர் மற்றும் அண்ணாநகர்) டா எக்ஸ்டென்சன்ஸ் நிறுவனமும் (நுங்கம்பாக்கம்) இணைந்து மார்பக புற்றுநோய் குறித்த சுய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிங்க் பவர்; எனும் உலக சாதனை முயற்சியை வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் மார்ச் 6 ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தினர்.
இந்நிகழ்வில் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்களும், மஹா ஹேர் மற்றும் பியூட்டி அகாடமியின் சார்பாக பல்வேறு நாடுகளைச் சார்ந்த 100 க்கும் மேற்பட்ட துறைசார் வல்லுநர்களும் இணைந்து பிங்க் நிற சிகையை 484.5 மீட்டர் நீளத்திற்கு அலங்காரம் (சடைப்பின்னி) செய்து உலக சாதனையைப் புரிந்தனர். இந்த உலக சாதனையை அங்கிகரிக்கும் வகையில் கின்னஸ் நிறுவனம் விரைவில் பாராட்டுச் சான்றிதழை வழங்கவுள்ளது.
இந்நிகழ்வின் ஓர் அங்கமாக மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சுய பரிசோதனை பயிற்சி வகுப்பினை 500 க்கும் மேற்பட்ட வேல்ஸ் பல்கலைக்கழக மாணவிகளுக்கும் பேராசிரியைகளுக்கும், அழகு நிலைய உரிமையாளர்களுக்கும், அழகுகலை நிபுணர்களுக்கும் துறைசார் மருத்துவக்குழுவினர் மார்ச் 4ஆம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புப் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சிகள் எதிர்காலத்தில் மேலும் தொடரும் என்பதையும் தெரிவித்தனர்.
இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வினை வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனரும், வேந்தருமான டாக்டர். ஐசரி. கே. கணேஷ; அவர்களும் மஹா ஹேர் மற்றும் பியூட்டி அகாடமியின் நிறுவனர் திருமதி மஹாலட்சுமி கமலக்கண்ணன் அவர்களும் டா எக்ஸ்டென்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி மேனகா அவர்களும் தலைமை ஏற்று வழிநடத்தினர். 3 மணிநேரம் 11 நிமிடம் 31 விநாடிகளில் 484.5 மீட்டர் கூந்தல் பின்னி உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் ஜெமினி கணேசனின் கொள்ளுப்பேத்தி, நிஹாரிகா சஞ்சய் மாடலாக இருந்து கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்களித்துள்ளார். 3 மணிநேரம் 11 நிமிடம் 31 விநாடிகளில் இந்த உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.