தீபாவுக்கு படகு சின்னம்

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், 127 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுக்கள் அளித்திருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் தினகரன், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனன், தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன், பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனுவும், மாற்று வேட்பாளர் உள்ளிட்ட 45 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னர், இதில் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தவிர சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.  அதில், ஜெ.தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி மீனவர்கள் நிறைந்த தொகுதி என்பதாலும், தன் தந்தை இறால் ஏற்றுமதி செய்தவர் என்பதாலும் தீபா படகு சின்னத்தை விரும்பினார். தற்போது படகு சின்னம் கிடைத்ததால் உற்சாகமடைந்துள்ள அவர், படகு சின்னத்தை அறிமுகப்படுத்தி பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.