ஆடவர் ஹாக்கி உலக்கோப்பை 2018 ஆம் ஆண்டு போட்டியை இந்தியாவில் நடத்திட ஹாக்கி சம்மேளனம் 2013ஆம் ஆண்டு ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான உலக லீக் பைனல் மற்றும் 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் ஆகியவை ஒடிசாவில் நடைபெறும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நவீன் பட் நாயக் கூறுகையில் “ இந்த 2 போட்டிகளுக்குமான டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை ஒடிசா பெற்றுள்ளது.
இரண்டு போட்டிகளுக்கும் முறையே ஆடவர் ஹாக்கி உலக லீக் பைனல் புவனேஸ்வர் 2017, ஒடிசா ஆடவர் உலகக்கோப்பை புவனேஸ்வர் 2018 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹாக்கி உலக லீக் பைனல் போட்டிகள் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலும் உலகக்கோப்பை போட்டிகள் 2018ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.
சர்வதேச தரத்தில் இந்த இரு போட்டிகளையும் ஒடிசா அரசு நடத்தவுள்ளது. இதற்காக ரூபாய் 75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் வெளிநாட்டவர்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகளை புவனேஸ்வருக்கு ஈர்க்கும் என நம்பிக்கை உள்ளது” என்றார். நவீன் பட் நாயக்கின் இந்த அறிவிப்பின்போது, சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் டாக்டர். நரீந்தர் டி பத்ரா, ஹாக்கி இந்தியா தலைமை செயல் அதிகாரி எலெனா நார்மன் ஆகியோர் உடனிருந்தனர்.