உஸ்மானபாத் தொகுதி சிவசேனா எம்.பி.யான ரவீந்திர கெய்க்வாட், கடந்த சில தினங்களுக்கு முன்பு விமானப்பயனத்தில் இருக்கை மாற்றி அளித்ததற்காக விமான நிறுவன மேலாளரை செருப்பால் 25 முறை அடித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா எம்.பி.க்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் விமானத்தில் செல்ல ஏர் இந்தியா உள்பட 7 விமான நிறுவனங்கள் தடை விதித்தது.
இந்நிலையில், இவ்விவகாரம் பாராளுமன்ற மக்களவையில் எதிரொலித்தது. மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தின் போது சிவசேனா உறுப்பினர் ஆனந்த்ராவ் அட்சுல் ,” கெய்க்வாட் மீது விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளது குறித்து சபாநாயகர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார். பின்னர் பேசிய சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் ,” உறுப்பினர் தனது பாராளுமன்ற கடமையாற்ற விமானத்தில் செல்லும் போது அதற்கு தடை விதிக்க விமான நிறுவனங்களுக்கு அதிகாரம் உள்ளதா?. உறுப்பினர் தவறு செய்திருந்தது நிரூபிக்கப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்த விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜு ,” சிறந்த முறையில் பாதுகாப்பு வழிமுறைகளை விமான அமைச்சகம் கொண்டுள்ளது. ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது போன்ற பிரச்சனைகளில் சிக்குவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை” எனத் தெரிவித்தார். இப்படியாக இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.