டெல்லியில் இருந்து திரும்பிய வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழ்நாட்டு விவசாயிகள், கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிதியை உடனே வழங்க வேண்டும் என்று டெல்லியில் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை நான் சந்தித்து பேசினேன். இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. பின்னர் நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்றேன்.
அதற்கு அவர் வறட்சி நிவாரண குழுவின் பரிந்துரையின் பேரில் நிதி வழங்க முடியும். நான் விவசாய துறை அமைச்சரையும் உள்துறை அமைச்சரையும் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பேன் என்று கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை. தமிழ்நாட்டில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடத்தலாம் என்று நினைத்தால் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழக விவசாயிகள் ஒரு லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.