ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பயணத் தேவையை பூர்த்தி செய்யும் அரசுப் பேருந்துகள் பழுது ஏற்படும்போது உடனுக்குடன் சரி செய்யப்படாததால் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, மாநகரப் பேருந்துகள் திடீரென நடுரோட்டில் பழுதாகி நிற்கும் காட்சிகள் பலமுறை நடந்துள்ளன. திடீரென ஸ்டியரிங் ராடு உடைவது, பிரேக் பிடிக்காமல் போகிற போக்கில் மோதி நிற்பது என பல சம்பவங்கள் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று ஒரு மாநகர பேருந்து விபத்தில் சிக்கி சேதமடைந்துள்ளது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் வந்துகொண்டிருந்த மாநகர பேருந்து, ஹாடோஸ் சாலை வளைவில் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பஸ்சின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் காயமடைந்தனர். மிதமான வேகத்தில் வந்ததால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.